Arts, culture, entertainment and media
அக்சய் குமாரின் “ஹைவான்” திரைப்படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும் ‘ஹைவான்’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓம்எம்ஜி 2’, ‘சர்பிரா’, ‘கேல் கேல் மெய்ன்’, ‘சிங்கம் அகெய்ன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சயீப் அலிகானும் தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘தேவரா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அக்சய் குமார் மற்றும் சயீப் அலிகான் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹைவான்’. இப்படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஒப்பம்’ படத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயீப் அலிகான் மீண்டும் இணைந்து நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
‘ஹைவான்’ திரைப்படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சயாமி கெர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘ஹைவான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும் ‘ஹைவான்’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.