Lifestyle and human interest
குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி அண்ணா நகர், செங்கல்பட்டி பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன.
இங்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டி, அண்ணா நகர் செல்லும் சாலை, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லுாரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், 100க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
அவ்வாறு மக்கள் வந்து செல்லும் இச்சாலை முழுவதும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியுள்ளது. நேற்று பெய்த மழையால், சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்று, சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொது மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.