Politics
சரக்கு வாங்குவதில் தள்ளுமுள்ளு வாலிபர் கழுத்தறுத்து கொலை

திருச்சி: திருச்சி அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், மதுக்கடை வாசலில் பிரகாஷ், 30, என்ற கூலி தொழிலாளியை கழுத்தறுத்து கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மருதுாரை சேர்ந்த பிரகாஷ், நேற்று மாலை சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், யார் முதலில் மது வாங்குவது என, பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது, சிலர் சேர்ந்து, பிரகாஷை தாக்கியுள்ளனர். அந்த நேரம், கும்பலில் இருந்த ஒருவர், கையில் வைத்திருந்த ஆயுதத்தால் பிரகாஷ் கழுத்தை அறுத்து தப்பியோடினார். பிரகாஷ், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்.
சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். கொலைக்கு காரணம், மது வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.