Arts, culture, entertainment and media
டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு; 1,400 ஏக்கர் நாற்றுகள் கருகும் அபாயம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு காரணமாக, 1,400 ஏக்கரில் தயாரிக்கப்பட்டுள்ள நெல் நாற்றுகளை நடவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா என, இரண்டு பருவங்களில் பிரதானமாக நெல் சாகுபடி நடக்கிறது. இப்பருவங்களில் உற்பத்தியாகும் நெல்லின் பெரும் பகுதி, அரசின் உணவு தானிய திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு, சேலம் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், குறுவை பாசனத்திற்கு ஜூனில் நீர் திறக்கப்படவில்லை. சம்பா சாகுபடிக்கு, கடந்த, 1ம் தேதி நீர் திறக்கப்பட்டது. அடுத்த, 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்றும், அப்போது அறிவிக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் நீர்வழித்தடங்களை, இந்த நீர் நனைக்கவில்லை. ஆறுகளில் மட்டுமின்றி, பிரதான கால்வாய்களிலும் போதிய நீரோட்டம் இல்லை.
தண்ணீர் கிடைக்கும் என நம்பி, டெல்டா மாவட்டங்களில், இதுவரை, 22 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும், 1,400 ஏக்கரில் நாற்றுகள் விடப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளன.
ஒரு ஏக்கர் நாற்றை, 10 முதல், 15 ஏக்கர் வரை நடவு செய்ய வேண்டும். அதன்படி, 14 ஆயிரம் முதல், 21 ஆயிரம் ஏக்கர் வரையில், இந்த நாற்றுகளை நடவு செய்யலாம். ஆனால், பாசனத்திற்கு நீர் கிடைக்காததால், நடவு செய்யாமல் அவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.