நீட் அல்லாத படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு விருப்பப் படிப்புகளை பதிவு செய்ய சென்டாக் அழைப்பு
புதுச்சேரி: நீட் மதிப்பெண் அல்லாத பட்டப்படிப்புகளுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு அறிவிப்பை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் பி.டெக்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் இதுவரை இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை நிரப்பியுள்ளது. இரண்டாம் கட்ட சேர்க்கை விவரங்கள் மற்றும் காலியாக உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் சென்டாக் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்து நீட் அல்லாத படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த சென்டாக் முடிவு செய்து, அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.டெக், வேளாண்மை, செவிலியர், பார்மசி, சட்டப்படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட சேர்க்கைக்கு விருப்பப் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள், சென்டாக் இணையதளத்தின் யூஜி நான் நீட் லாக்-இன் வாயிலாக வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்குள் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அளிக்கப்பட்ட விருப்பப் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே, மூன்றாம் கட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக புதிதாக விருப்ப படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
புதிய கல்லுாரி சீட்டுகள்:: இந்த சுற்றில் மாணவருக்கு புதிய இடம் ஒதுக்கப்பட்டால், இரண்டாம் கட்டத்தில் அவர் சேர்ந்திருந்த பழைய இடம் தானாகவே ரத்தாகிவிடும். புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை, புதுச்சேரி பல்கலைக்கழக உத்தரவின்படி, வெங்கடேஸ்வரா பார்மசி, பாராமெடிக்கல், இந்திராணி நர்சிங் கல்லுாரி மற்றும் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் பொறியியல் அல்லாத படிப்புகளுக்கும் விருப்பப் பாடங்களை தற்போது தேர்வு செய்யலாம்.
கட்டணம்:: கலை மற்றும் அறிவியல் பிரிவில் விண்ணப்பித்து, தற்போது தொழில்முறைப் படிப்புகளுக்கு மாற விரும்பும் மாணவர்களும், இடஒதுக்கீடு, இருப்பிடம் மாறியதால் விண்ணப்பக் கட்டண பாக்கி உள்ள மாணவர்களும் மீதிப் பணத்தைச் செலுத்திய பிறகே விருப்பப் பாடங்களை பதிவு செய்ய முடியும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், மாணவர்கள் தங்களது லாக்-கின் கணக்கில் உள்ள கிரீவன்ஸ் பிரிவு வாயிலாகவோ அல்லது 0413-2655570 என்ற உதவி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.