பிள்ளையார்பட்டி கோயிலில் சதுர்த்தி விழா தேரோட்டம் இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று சதுர்த்தி திருவிழா தேரோட்டம் நடந்தது. இன்று காலை சதுர்த்தி மற்றும் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.
இக்கோயிலில் செப்., 15 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்திலும் இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். நேற்று மாலை 4:55 மணிக்கு பிச்சை, சோமசுந்தரர், ஸ்ரீதர் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு பி.எல்.ஏ.ஆர்., ராமசாமி, அரிமளம் எஸ்.என்., கண்ணன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. சண்டிகேஸ்வரர் தேர் வடத்தை பெண்கள் மட்டுமே இழுத்தனர். நேற்று இரவு 10:30 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். இரவு யானை வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா வந்தார்.
இன்று தீர்த்தவாரி விழாவின் 10 ம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு மேல் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் அங்குசதேவருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். மதியம் மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறும்.