அரிசோனாவில் 60 நாட்கள்! காலிஃபோர்னியாவின் ஹியர்ஸ்ட் கோட்டை - பிரேமா இரவிச்சந்திரன்

பசிபிக் கடலோரம் கரை ஒதுங்கி உறங்கியும் மணலை அள்ளி தன் மீது தூவியும் தன் குட்டிகளுக்கு பாலூட்டியும் ஆங்காங்கே தனித்தனியாக படுத்திருக்கும் கடல் யானைகளை ரசித்தவாறே கடற்கரைச் சாலையை குறுக்கே கடந்தால், எதிர்ப்புறத்தில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயர்ந்திருக்கின்ற மலைப்பகுதி அமைந்திருக்கிறது. இதன் மீது தனியொருவர் தனக் காக எழுப்பிய அரண்மனை போன்ற மாளிகை, தற்பொழுது கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு சொந்தமாகி மக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது.
தொலைவிலிருந்து பார்த்தபோது, "த்ரீ இடியட்ஸ்' (பட்ழ்ங்ங் ண்க்ண்ர்ற்ள்) எனும் ஹிந்தி மொழிப் படத்தின் இறுதிக் கட்டத்தில், நாயகன் வாழ்கின்ற இடத்தைத் தேடி நண்பர்கள் செல்லும்போது, காமிராவின் கண்கள் மூலம் நாம் திரைப்படத்தில் பார்த்திருந்த
அரண்மனை போன்ற வீட்டை நினைவு படுத்தியது. அதைவிட பிரம்மாண்டமானதாக இந்தக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் மாளிகை இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பையும் கொடுத்தது. அதன் வாயிலின் அருகே சென்று எங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு வரவேற்பறைக்குச் சென்று நுழைவுச் சீட்டை பெற்றுக்கொண்ட பிறகு, பேட்டரியால் இயங்கிய அவர்களது பேருந்தில் ஏறிச்செல்ல தயாராக இருக்கும்படி அறிவிப்பு வந்தது. அங்கு இயற்கையோடு வளர்கின்ற விலங்குகளையும் வளர்ப்புப் பிராணிகளையும் ஒலி, ஒளி போன்ற மாசுகளும் காற்றில் கலந்திருக்கும் நச்சுகளும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.
வாகனம் வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் அங்கே வரவேற்பறையில் உட்புறமாக இருந்த திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம், தொலைவிலிருந்த கோட்டையைக் காண்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுழைவாயிலின் அருகேயிருந்த மற்றுமொரு அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களில் அவ்விடத்தின் வரலாறுகளை வாசித்தும் புகைப்படங்களைக் கவனித்தபடியும் ஓரளவு செய்திகளை உள்வாங்க வாய்ப்பாக அமைந்தது. சிறிது நேரம் இடைவெளியில்
அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து அங்கு காத்திருந்த அனைவரையும் அழைத்துச் சென்றது. சில்லென்ற சாரல் மழையில் நனைந்து கொண்டிருந்த பசும்புற்கள் போர்த்திய அழகான மலை, அங்கே அளவோடு உயர்ந்திருந்ததால் அதன் உச்சியையும் கண்ணெதிரே காணநேர்ந்தது. நெடுந்தொடரான மலையென்று அல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து இடைவெளியே இல்லாமல் காணுமிடமெல்லாம் பச்சைக்கிளியின் நிறம் கொண்ட அழகிய புற்கள் முற்றிலுமாக நிறைந்திருந்தன. சமதளப்பரப்பு என்பதே அப்பகுதியில் இல்லை.
அவ்விடத்தில் வளரும் வளமான புற்களை உண்டு வாழும் மாடுகள், கூட்டம் கூட்டமாக அங்கு மேய்ந்துகொண்டிருந்தன. இவை சுரக்கும் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வியாபார நோக்கில் அக்கோட்டையிலேயே வளர்க்கப்படும் மாடுகளென பின்னர் தெரிந்தது. இவற்றிற்கு இயற்கை சாராத எந்தவிதமான மருந்துப் பொருள்களையோ ஹார்மோன்களையோ உடலில் செலுத்துவதில்லை. பசிபிக் கடலோர மலைப்பிரதேசத்தில், உரமிடாமல் இயற்கையாக வளர்ந்து துளிர்த்துக்கொண்டே இருக்கும் மலைப் புற்களை மட்டுமே உண்டு வாழ்கின்ற மாடுகள் என்பதால், சிறப்புமிக்கதாக அடையா ளப்படுத்தப்படுகின்றன. இதன் இறைச்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நாங்கள் பயணித்த பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நெடுஞ்சாலையின் மறுகரை முழுவதும் இதே மலைத்தொடரால் நீண்டிருந்ததால் அங்குள்ள புற்களை உணவாகக் கொண்டு வாழ்ந்துவருகின்ற பிற மாடுகளும் இப்படியான தரத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதென்று எண்ணிக் கொண்டோம். மாடுகள் வளர்க்கப்படுகின்ற பகுதிகளில் சாலைக்கும் மலைக்குமிடையே வேலிகள் அமைத்து, அவை மலைச் சாரலிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கவும் செய்கிறார்கள்.
அதேசமயத்தில் அவை சுதந்திரமாகவும் மலைகளில் உலவி வருகின்றன.
அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணித்த சில நிமிட நேரங்களில் ஹியர்ஸ்ட் கோட்டையை (Hearst Castle) வந்தடைந்தோம். கலிஃபோர்னியா மாகாணத்திற்குச் சொந்தமான பூங்காவாக இருக்கும் இந்தக் கோட்டை அமைந்திருக்கும் கடற்கரைப் பகுதிக்கு இதனைக் கட்டியவரின் பெயரான வில்லியம் ரான்டோல்ஃப் நினைவுச் சின்ன கடற்கரை (William randolph memorial beach)என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இவர்களது யூடியூப் வலைத்தளத்தில், அரண்மனை போன்ற கோட்டையின் உட்பகுதியிலுள்ள அழகிய வேலைப்பாடுகள், காய்கறி விளையும் தோட்டங்கள் போன்ற விவரங்களை பதிவேற்றியிருக்கிறார்கள். இக்கோட்டையைச் சுற்றிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை உரிமையாகக் கொண்ட இவர்களின் குடும்பங்கள், இங்கு மாடுகளை வளர்க்கும் தொழிலை, கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
ஹியர்ஸ்ட் கோட்டையில் இருக்கும் இவ்விடத்திலிருந்து நான்கரை மைல் தொலைவிற்கு வடக்கு திசையை நோக்கிப் பயணித்தால் கடல்யானைகள் கடற்கரையில் அடைக்கலமாகின்ற பீட்ராஸ் பிளாங்காஸ் (piedras blancas) எனும் பசிபிக் கடலோரப் பகுதியை அடை யலாம். 1992-ஆம் ஆண்டில் இதன் முதல் குட்டி இங்கு பிறந்திருக்கிறது. அப்போதிலிருந்து இன்று வரை இக்கடற்கரைப் பகுதியில் எட்டு மைல்கள் தொலைவு வரை கிட்டத்தட்ட இருபத்தி ஐந்தாயிரம் கடல்யானைகள் பிறந்து வளர்ந்திருக்கின்றன. மிக அழகிய இக்கோட்டையின் முகப்புப் பகுதியை புத்தகங்களில் பிரசுரிக்க தடையிருந்தாலும் அதன் உட்பகுதியில் விரும்பியபடி புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என்கிற அனுமதியைக் கொடுத்தார்கள்.
அழகிய மலையையும் இதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் லா காசா கிராண்டே, அதன் அருகே அரிய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் கட்டிடம் மற்றும் அழகான தோட்டங்கள் (1919 - 1947) என யாவற்றையும் ஹியர்ஸ்ட் நிறுவனத்தின் (The hearst corporation) மூலம், தன் அன்னையின் நினைவாக 1958-ஆம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு வில்லியம் ஹியர்ஸ்ட் பரிசாகக் கொடுத்துவிட்டார். அன் றிலிருந்து கலிஃபோர்னியா அரசு இவ்விடத்தை வரலாற்று ஸ்தலமாக அறிவித்துவிட்டது. ஹியர்ஸ்ட் பண்ணைப் பாதுகாப்பு அமைப்பு (The Hearst Ranch Conservation Easement) கலிஃபோர்னியாவின் இவ்விடத்திலுள்ள அழகான இயற்கை அமைப்பை பாதுகாத்து வருகிறார்கள்.
இங்குள்ள நீரில் இருக்கும் மட்குகளைப் படிய வைத்து, சுத்தமான குடிநீராக மாற்றி, இங்கு வாழும் விலங்குகளும் மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தக் கோட்டை உருவான 1865 ஆம் ஆண்டில் அதனை பராமரித்து வந்த முறையில் எந்தவித மாற்றமுமில்லாமல் இன்றும் பராமரித்து வருகிறார்கள். இதனாலேயே இங்கு வளர்கின்ற மாடுகளிலிருந்து பெறப்படுகின்ற இறைச்சியை தரமிக்கதாகக் கருதுகிறார்கள். இதனைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள https.//rangelandtrust.org என்னும் இணையதளத்திலும் காணலாம்.
இந்தக் கோட்டையைக் கட்டுவதற்காக நியமிக்கப்பட்ட கட்டிடக்கலை நிபுணர் மார்கன் (Morgan), ஐரோப்பாவிலிருந்து கலிஃபோர்னியாவிற்கு ஏற்கனவே குடியேறி வாழ்ந்துகொண்டிருந்த கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதன் உட்புற கூரையில் அழகிய ஓவியங்கள், சுவரின் ஓரங்களில் அலங்கார விளிம்புகள், கதவுகளிலும்
ஜன்னல் கம்பிகளிலும் நுண்ணிய வேலைப்பாடுகள், அழகிய வடிவமைப்புகளிலான கலை அம் சமான விளக்குகளென யாவற்றிலும் கலை நுணுக்கங்கள் மிகுந்திருக்கின்றன. ஓவியங்களில் ஆங்காங்கே கில்டர்ஸ் (gilders) எனும் தங்கத் தகடுகளை பதித்திருக்கிறார்கள். நீச்சல் குளத்திலும் தோட்டங்களிலும் அரை நிர்வாணமான இளம்பெண்களின் சிலைகளை நிறுவியிருக்கி றார்கள்.
எந்தெந்த நிறங்களில் பூக்கும் மலர்களை எவ்வகையில் நடுவதென ஆலோசனைகளைக் கொடுக்கும் தோட்டக்கலை நிபுணர்களைக் கொண்டு பல பூஞ்செடிகளை நட்டிருக்கிறார்கள். பல கலைஞர்கள் இவ்விடத்திலேயே பணிபுரிகிறார்கள் என்றாலும் சிலர் தங்களது சொந்த தொழிற்சாலை அமைந்திருந்த இடங்களான சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற இடங்களில் இருந்தவாறே பணி செய்து கொடுத்திருக்கிறார்கள். இன்று இந்தக் கோட்டையில் பழுதாகும் பகுதிகளை, கலிஃபோர்னியா தேசியப் பூங்காவின் பொறுப்பில் அவ்வப்பொழுது சரிசெய்து பராமரித்து வருகிறார்கள்.
இருபத்தி எட்டு ஆண்டுகால நெடிய பயணமாக இந்தக் கட்டிடம் எழும்பியிருக்கிறது. 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்ட ஆரம்பித்த முதல் திட்டம், சிறிது காலத்திற்கே இருந்திருக்கிறது. கட்டிடக்கலை நிபுணர் மார்கன் மற்றும் உரிமையாளர் வால்டர் ஸ்டீல்பர்க் ஹியர்ட்ஸ் ஆகியோரின் எண்ணத்தால் இந்தக் கோட்டை தொடர்ச்சியாக விரிவடைந்தும் மாற்றங்களைக் கொண்டும் வளர்ந்திருக்கிறது. சில நேரங்களில் முழு பணியையும் முடித்த பிறகு முற்றிலும் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். இதனால் தொய்வடைந்த கலைஞர்கள் மிகவும் மனவேதனை அடைந்திருக்கிறார்கள். மார்கன் (Morgan) தன்னுடைய நண்பனான ஆர்தர் பைன் (Arthur Byne) க்கு எழுதிய கடிதத்தில் “மனதை மாற்றி மாற்றிக் கட்டுவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் ஹியர்ட்ஸ் என்னையே மாற்றிக்கொள்ள அனுமதிப்பது மட்டுமே அதனை ஈடுகட்டிவிடுகிறது” என்று எழுதியிருக்கிறார்.
கலிஃபோர்னியாவின் நில அமைப்பு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் இயல்பைக் கொண்டது. குளிரிலும் மழையிலும் வளரும் புற்கள் கோடையில் காய்ந்துவிடுவதால் வெயிலின் வெப்பம் தாங்காமல் இங்குள்ள தாவரங்கள் தீப்பற்றி சாம்பலாகிவிடும் தன்மையுடையவை. இதனைக் கருத்தில்கொண்டு அதற்கேற்றவாறு கான்க்ரீட்டில் இரும்புகளைப் பயன்படுத்த வேண்டும். கான்கிரீட் கலவைக்கு தேவைப்படும் நீரை சில மைல்கள் தொலைவிலிருந்து கொண்டு வர வேண்டும். தரையில் கலந்த கலவையை ஹாப்பர் (hopper) எனும் கலனில் நிரப்பி மேலே ஏற்றி உச்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இப்படியான வரலாறுகள் யாவற்றையும் அங்கு பார்வையாளர்களாக வருபவர்கள் அறியும்படி கட்டிடத்திலேயே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மாபெரும் சாதனைகளை படைத்திருக்கும் நம் முன்னோர்கள் பிரம்மாண்டமான வடிவமைப்புகளாலான கோபுரங்களை எழுப்பிவிட்டு அதன் வரலாறுகளை நாம் தேடித் தேடி கண்டறிவது போல இருப்பது நினைவிற்கு வந்தது. நமது இந்திய அர சாட்சிகளின் அடையாளங்கள் கொடுக்கின்ற பிரமிப்புகளைவிட கலிஃபோர்னியாவில் இருக்கும் இந்தக் கோட்டையின் வரலாறு வியப்பைக் கொடுக்கவில்லை என்றாலும் அது தனி மனி தனது ஆடம்பர வசதிகளைக் கொண்ட கட்டிடம் என்பதால் அங்கிருப்பவர்கள் இதனை வியப்பாக உணர்ந்து மாகாணத்தின் சொத்தாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
சான் சைமன் (San simeon) எனும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடம் கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து கட்டுமானப் பொருட்கள் கிடைக்கும் இடத்திலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் கட்டும்பொழுது பல சவால்களைச் சந்தித்திருக்கிறார்கள். முதல் முயற்சியாக 90-க்கும் மேற்பட்ட வேலையாட்களைக் கொண்டு மலையின் உச்சிக்குச் செல்ல 5 மைல்கள் தொலைவிற்கு பாதையை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக நான்கு கட்டடங்களைக் கட்டி, நீர் ஆதாரத்திற்காக ஏரியை வெட்டி, நீரை விநியோகிக்க ஹைட்ரோ எலக்ட்ரிக் பிளாண்டை நிறுவியிருக்கிறார்கள். இவ்விடம் உயிர்ப்போடு இருக்க விலங்குகளின் சரணாலயத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஸ்பானியர்களின் கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இரண்டு நீச்சல் குளங்களும் உடைமாற்றும் அறையும் டென்னிஸ் கோர்ட்டும் காசாகிராண்டி எனும் பிரம்மாண்டமான தங்குமிடமும் மூன்று சிறிய வீடுகளும் திறந்தவெளியும் அமைந்து, இவை யாவும் ஆடம்பரமான நடைபாதையால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இத்தாலியர்களின் கலை அம்சத்தோடு கூடியதாக இங்குள்ள தோட்டங்கள் இருக்கின்றன. சாண்டா லூசியா (Santa lucia)எனும் இந்த மலையின் உச்சியிலிருந்து அருகே இருக்கின்ற பசிபிக் பெருங்கடலின் கரையோர அலைகளைக் காண்பது கொள்ளை அழகு! அங்கொரு கோட்டையை கட்டிக் கொண்டு வாழவேண்டுமென்பது அவ்விடத்தைக் காணும் யாவருக்கும் விருப்பமாகுமென்றாலும் அதனை "ஹியர்ஸ்ட்'' எனும் ஒரு ஸ்பானியர் அடைந் திருக்கிறார்.
இவை யாவும் புதிய வரலாறுகள் என்றாலும் இந்த மண்ணுக்கு சொந்தமான பூர்வீகக் குடியினரின் அடையாளங்கள் அங்கு ஒரு துளியும் மிச்சமில்லை என்பதால், அவர்களது வரலாற்றை முற்றிலும் அழித்துவிட்டு அதன் மீது இந்தக் கோட்டை எழுப்பப்பட்டிருக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தது. விசாரித்தபோது, "ஆம், அப்படித்தான் நடந்திருக்கிறது.'' என்பதும் வெளிப்பட்டது. இந்நாளில் இங்குள்ள மாகாணங்களில் வசிக்கின்ற ஸ்பானியர்களிலும் பலர், இங்கு தூய்மைப் பணியையும் கட்டிட வேலைகளையும் உடல் உழைப்பைக் கொடுக்க வேண்டிய இன்னும் பிற தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)