ஓடும் ரயிலில் ஏற முயன்ற பூ வியாபாரி கால் துண்டிப்பு
சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்தில் விழுந்த பூ வியாபாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி பழனி 55. இவர் திருச்சியில் உள்ள மகளை பார்ப்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரயிலில் மானாமதுரையில் இருந்து நேற்று மாலை 4:45 மணிக்கு பயணம் செய்தார்.
ரயில் சிவகங்கையில் 5:00 மணிக்கு நின்ற போது அவர் கீழே இறங்கியுள்ளார். சிவகங்கையில் இருந்து ரயில் புறப்பட்டபோது மீண்டும் ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால்தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.
இதில் அவரது இரு கால்களின் மீதும் ரயிலின் சக்கரம் ஏறியதால் கால்கள் துண்டாயின. சக பயணிகள் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
இதனால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.