இதே நாளில் அன்று

செப்டம்பர் 16: மதுரையில், சுப்பிரமணிய அய்யர் - சண்முகவடிவு அம்மாள் தம்பதியின் மகளாக, 1916ல் இதே நாளில் பிறந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவரது தாய் பிரபல வீணை கலைஞர் என்பதால், தாயிடமே கர்நாடக இசையை கற்றார்.
பின், செம்மங்குடி சீனிவாச அய்யர், முசிறி சுப்பிரமணிய அய்யர், பண்டித நாராயண ராவ் வியாஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் முறையாக இசை பயிற்சி பெற்றார். தன் தாயுடன், 8 வயதிலேயே மேடையில் பாடத் துவங்கி, மாநிலம் முழுதும் பாடி பிரபலமானார்.
கடந்த 1938ல் வெளியான சேவாசதனம் படத்தில் அறிமுகமான இவர், சகுந்தலை, சாவித்திரி, மீரா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். மீராவாக இவர் நடித்ததை, அப்போதைய பிரதமர் நேரு பாராட்டினார்.
நம் நாட்டின் கலாசார துாதுவராகி, ஐ.நா., சபை உள்ளிட்ட அமைப்புகளிலும், பல நாடுகளிலும் கச்சேரிகள் நடத்தியவர், 'பாரத ரத்னா, பத்ம பூஷண், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேசே' உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.
தன் இசை நிகழ்ச்சிகளால் கிடைத்த வருவாயின் பெரும் பகுதியை சமூக சேவை பணிகளுக்கு தானமாக வழங்கிய இவர், தன் 88வது வயதில், 2004, டிசம்பர் 11ல் மறைந்தார். தான் பாடிய சுப்ரபாதத்தால், திருப்பதி ஏழுமலையானை தினமும் எழுப்பும் இசையரசியின் பிறந்த தினம் இன்று!