Politics
ராங்கால்! விஜய் கேலி! ஸ்டாலின் பதில்! வைரலாகும் வீடியோ!

"ஹலோ தலைவரே, கடந்த ஆகஸ்ட் 15-18 நக்கீரன் இதழில் புதிய தலைமைச் செயலகம் வரவிருப்பதையும், அதற்காக பட்டினப்பாக்கம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அருகில் இடம் தேர்வுசெய்யப் படுவதையும் குறிப்பிட்டிருந்தோம் இல்லையா!''”
"ஆமாம்பா, நாம தெரிவிச்ச மாதிரியே நடந்துக்கிட்டிருக்கே!''”
"இப்ப நக்கீரன் கூறியதுபோல் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் வரவிருக்கிறது என்றும், அதற்கான இடங்களாக பட்டினப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் 4593/1, 4593/29, 4593/33, 4595 சர்வே எண்கள் கொண்ட 21.37+ 0.39 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உத்தரவிட்டுள்ளது த.வெ.க. அரசு. இதற்கான பணிகளை துரிதப் படுத்தவும் சொல்லியிருக்காம்.''’
ஸ்டாலின் பதில்!
"சட்டமன்றத்துக்கான மாண்பை மறந்து, அரசியல் மேடையைப் போல் உருவ கேலி செய்த விஜய்க்கு சரியான பதிலைத் தந்திருக்கிறாரே ஸ்டாலின்?”
"சட்டமன்றத்தில் பேசிய விஜய், ஸ்டாலினை கேலிசெய்யும் விதமாக தனது உடல்மொழியைக் காட்டினார். இது பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. விஜய்யின் உடல்மொழியை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கண்டித்திருக்கிறார்கள். இந்த நிலையில், விஜய்க்கு அறிவுரை சொல்லும்வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதில், ’"சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறு இருப்பதால், நான் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்'’என்று தொடங்கி, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அவருக்கு ஏற்பட்ட சித்ரவதைகளை விவரித்திருக்கிறார் ஸ்டாலின். தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாழ்க்கையில் இருக்கிறவர்களுக்கு, முக்கியமாக தமிழர் களுக்காகவும், தமிழ் நாட்டிற்காகவும் போராடுகிறவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்கு முறைகள் நடந்திருக்கிறது. போராளிகள் எல்லாம் இதைத்தாண்டிதான் வந்திருப்பார்கள். எதிர்த்துப் போராடுவதும் அதனுடைய விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது. என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள், உண்மை என்னவென்று புரியும். முதலமைச்சர் தம்பி விஜய், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும்தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அது. அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது. சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நலத்திட்டங்கள், தமிழ் நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுபோவது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது இதையெல்லாம் விவாதம் பண்ணுங்கள். அதுதான் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது என்று மிகப்பொருத்தமான, கண்ணியமான வார்த்தைகளால் விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின். அவரது வீடியோ பேச்சு, அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இளைஞர்களிடமும் பேசுபொருளாகி வருகிறது.''”
வருத்தப்பட்ட பா.ஜ.க.!
"உதயநிதியின் ரெட்டி க்ரூப் பற்றிய பேச்சுக்கு, அவசரப்பட்டுட்டதா பா.ஜ.க. ஆதங்கப்பட்டிருக்குதே?''”
"ஆமாம் தலைவரே, சட்டசபை மானியக் கோரிக்கையில் உதயநிதி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த பதிலுரையில் பழைய விவகாரங் களையும், அமலாக்கத்துறை குறிப்புகளையும் பேசிவிட்டு அமர்ந்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும் கூட்டணிக்கட்சி மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வெளிநடப்பு செய்தார் தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின். செய்தியாளர்களிடம், "விஷ்ணுரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி உள்ளிட்டோர் அரசு நடத்தும் கனிமவளங்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சமீ பத்தில்கூட சட்டப் பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விஷ்ணுரெட்டிக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். இதிலிருந்தே யார் ஆட்சியை இயக்குகிறார்கள் என்பது தெளிவாகிறது. இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப்போகிறேன்'’என்றார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். "ரெட்டி க்ரூப்பின் ஆட்டம் குறித்து எங்களுக்குத் தெரியாமல் இல்லை. கனிம வளமோ, டாஸ்மாக்கோ எதில் அவர்கள் வந்தாலும் அவர்களைக் கொண்டே த.வெ.க. அரசை உலுக்கத்தான் காத்திருந்தோம். அதற்குள் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் கூறிவிட்டார். இனி அவர்கள் உஷாராக இருப்பார்கள். இந்த விஷயத்தில் உதயநிதி அவசரப்பட்டிருக்கக்கூடாது' என வருத்தம் தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசிய தலைமையிலுள்ள லீடர். இருப்பினும் மத்திய உளவுத்துறையின் பார்வையின் வீரியம் இன்னும் குறையவில்லையாம்.''”
வதந்தி அரசியல்!
"அறிவாலயத்தில் நடந்த தேர்தல் ஆலோ சனைக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ள வில்லைனு த.வெ.க. வதந்தி அரசியல் பண்ணுதாமே?''”
"உங்க காதுக் கும் வந்துடுச்சா. அக்டோபர் 6-ஆம் தேதியன்று மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. தோழமைக்கட்சி களுடன் இணைந்து இரு தொகுதிகளிலும் வேட் பாளர்களைக் கள மிறக்கியுள்ளது. இது குறித்தான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை யன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. ‘இதில் தி.மு.க.வின் கொங்கு மண்டல முகமாகப் பார்க்கப்படும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மிஸ்ஸிங். செந்தில்பாலாஜிக்கு அழைப்பில்லை. செந்தில்பாலாஜியை புறக்கணிக்கிறது தி.மு.க. தலைமை’ என ட்ரோல் செய்து வதந்தி பரப்பி மகிழ்ந்தது த.வெ.க. தரப்பு. அது அரசியல் வட்டா ரத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், ‘கரூர் மாவட்ட தி.மு.க. கூட் டத்தில் பங்கேற்றிருக்கிறார் செந்தில்பாலாஜி. இதற் காகத்தான் சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில்கூட அவர் பங்கேற்கவில்லை’ என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது தி.மு.க. தலைமை.''
பி.ஆர்.ஓ. சர்ச்சை!
"என்னப்பா கூட்டுற வுத் துறை அமைச்சரோட பி.ஆர்.ஓ. பற்றி காதில் செய்தி விழுதே?''”
"கூட்டுறவுத்துறையின் அமைச்சர் காந்திராஜின் பி.ஆர்.ஓ.வாக இருப்பவர் ராஜா இவர் சீனியர். எப்படியாவது முதல் வருக்கே .பி.ஆர்.ஓ. ஆகிவிட வேண்டுமென த.வெ.க. முக்கிய புள்ளி களை வைத்து காய் நகர்த்தினார். ஆனாலும் அவரைப்பற்றி விசாரித்து அவரை நிராகரித்தது. பிறகுதான் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பி.ஆர்.ஓ.வாக நியமித்தனர். ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சரை மதிக்காமல், எந்நேரமும் அத்துறை பணிகளை மேற் கொள்ளாமல், நிர்மல்குமார் உடன் பயணித்துக் கொண்டும், அவருடைய துறைகளின்கீழ் வரும் டெண்டர், டிரான்ஸ்பர் போன்ற வேலைகளை கவனித்துக்கொண்டுமிருக்கிறாராம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நேரங்களில் பத்திரிகையாளர் அமரும் இடத்தில் இருந்துகொண்டு சகல வேலைகளும் செய்து வருகிறார். இதனால் கூட்டுறவுத்துறையில் அவர் செய்யும் வேலைகள் தேக்கமடைந்துள்ளன. அமைச்சரும் இவரை மாற்றி வேறு யாரையாவது கொடுங்கள் என்கிறாராம்.''’
"மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுவதா குரல்கள் எழுந்திருக்கே?''
"ஆமாங்க தலைவரே.. கோபுரக் கலச நன்னீராட்டு விழா, கருவறை பூசை, வேள்விச்சாலை மூன்றிலும் தமிழில் திருமுறைகள், தமிழ் வேதமந்திரங்கள் ஓதவேண்டுமென தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கிய தீர்ப்பில், மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறை பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்றிலும் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதும்போது, தமிழ் திருமுறை ஓதுவார்கள் ஒருபக்கமாக நின்று தமிழ் மந்திரங்களை ஓத அனுமதிக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஆனால் மீனாட்சியம்மன் கோயிலில் முக்கிய விருந்தினராக சங்கராச்சாரியார் வருவதால், குடமுழுக்கில் தமிழில் வேதமந்திரம் ஓதுவதை அவர் விரும்பமாட்டார் எனக் கருதி அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவின் பேரில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.'' (இதுகுறித்த விரிவான செய்தி அடுத்த நக்கீரன் இதழில் இடம்பெறும்)’
அவலம்!
"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணாக்கர் களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் மாணவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார் களாமே?''”
"இந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தினைப் பொறுத்தவரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பெயருக்குத் தான் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதே தவிர போட்டியில் கலந்துகொண்ட மாணாக்கர்களுக்கு குடிக்க தண்ணீர்கூட வைக்கவில்லை மாவட்ட நிர்வாகம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணக்கர்களுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், உணவுகளை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வழங்கவேண்டும். ஆனால் எதனையும் வழங்கவில்லை. இதனால் மாணாக்கர்கள் மயங்கி விழுந்ததுதான் மிச்சம் என்கிறார்கள்.''”
யு-டர்ன் போடும் சைக்கிள்!
"தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன், மீண்டும் தனது கட்சியை காங்கிரசில் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக அவரது வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகிறதே?''”
"பா.ஜ.க.வில் பெரிதாக ஒன்றும் மரியாதையில்லை. காங்கிரசில் மீண்டும் சேர்ந்துவிடலாம் என்று ஏற்கனவே த.மா.கா, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஜி.கே.வாசனிடம் வலியுறுத்திவந்த நிலையில், அவரும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம். ஆனால், ராகுல்காந்தியை சந்தித்து சில உடன்பாடுகளுக்கு உறுதி தெரிந்தால்தான் காங்கிரசில் மீண்டும் இணைவதில் அர்த்தமிருக்கிறது; வெறுமனே இணைவதில் எந்தப் பலனும் இல்லை என்கிற சிந்தனையில் இருப்பதால், ராகுல்காந்தியை சந்திப்பதற்கான முயற்சியில் வாசன் இருக்கிறாராம். ஒருவேளை ராகுலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால், வாசன் முன்வைக்கும் கோரிக்கைகள் ஏற்கப்படுமா என்பது சந்தேகம்தான். குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்தால், அந்த பதவியை கொடுக்க ராகுல் விருப்பப்படமாட்டார் என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.''” ’
கம்யூனிஸ்ட்கள் யார் பக்கம்?
"வருகிற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் யார் பக்கம் ஆதரவை அறிவிக்கப் போகிறார்கள்?''”
"தலைவரே, அதை அவங்க இன்னும் உறுதிப்படுத்தலை. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி யிருக்கிறது. சென்றமுறை தி.மு.க. கூட்டணியிலிருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய நான்கு கட்சிகளும் இப்போது ஆளுங்கட்சியான த.வெ.க.வின் புதிய கூட்டணிக்குள் சென்றுவிட்டன. இது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், ‘"இந்த இடைத்தேர்தல் என்பது மைனாரிட்டியாக உள்ள இந்த த.வெ.க.அரசை மெஜாரிட்டியாக மாற்ற நடைபெறுவது, த.வெ.க.வை வெற்றிபெற வைத்து எம்.எல்.ஏ.க்கள் பலத்தைக் கூட்டுவதுதான் அவர்களின் திட்டம். எங்களை வைத்தே எங்கள் கண்களை குத்துவார்கள். கொள்கை ரீதியாகவோ, வேறெந்த விதத்திலோ தி.மு.க.வுடன் நாங்கள் முரண்பட்டு நிற்கவில்லை. எனவே சென்ற முறை தேர்தலைச் சந்தித்ததுபோல், இந்த இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏன் நமது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை வழங்கக்கூடாது? என தோழர்கள் விவாதித்து வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 22-ஆம் தேதி மாநில நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பற்றியான கம்யூனிஸ்ட்டுகளின் முடிவை அறிவிக்கவுள்ளது’ என்கிறார்கள்.''”
"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. சமீபத்தில் ஒன்றிய அரசையே மாணவர்கள் போராட்டம் அசைத்துப் பார்த்தமாதிரி, கேரளாவில் ஒரு தலித் மாணவியின் போராட்டம் பல்கலைக்கழகத்தை அசைத்திருக்கிறது. மலப்புரம் திரூரிலுள்ள துஞ்சத்து எழுத்தச்சன் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் துறையில் பி.எச்.டி. ஆய்வு மாணவியாக இருப்பவர் அனகா சசி. அப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் அனகா தலித் மாணவி என்பதால் சாதி அடிப் படையில் பாகுபாடு காட்டியதாகக் கூறினார். ஆராய்ச்சிக்கு சம் பந்தமில்லாத தூய்மைப் பணிகள், பழைய ஆவணங்களை அடுக்குவது போன்ற வேலைகள் செய்யச் சொன்னதாகவும் கூறியவர், தனது டாக்டோரல் கமிட்டிக் கூட்டம் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், குறிப்பாக பேராசிரியர் அருண் பாபு, ஜைனி வர்கீஸ் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள் என குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழக வாசலில் அனகா போராட்டத்தைத் தொடங்க, அவருக்கு மாணவர்களும் தலித் அமைப்புகளும் ஆதரவாகக் களமிறங்கினர். போலீஸ் காரர்கள் போராட்டக்காரர்களை லத்தி சார்ஜ் செய்யுமளவுக்குப் போனது. இந்நிலையில் செப்டம்பர் 7லிஆம் தேதி அனகாவின் முக்கியக் கோரிக்கைகளை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்க, அனகா தனது போராட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.''
சென்னையில் மீண்டும் கொலை!
இன்ஸ்பெக்டரே உடந்தை!
தலைநகர் சென்னையில் திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவர், தன்னைப் படுகொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கடந்த எட்டாம் தேதி, குடும்பத்தோடு சென்று திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் மறு நாள் இரவிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரதீப்ராஜ், திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்தித்து, நவநீதம் என்பவரிடம் தனது தாய்க்குத் தெரிந்தவர் பணம் வாங்கியதாகவும், அவர் பணத்தைச் செலுத்தத் தவறிய நிலையில், 3 லட்சம் ரொக்கத்திற்கு இதுவரை சுமார் ரூ.18 லட்சம் வரை கட்டி யும், தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான புகாரில், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தங்களை நேரில் அழைத்து மிரட்டியதாகவும் பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மறுநாளே பிரதீப்ராஜ், திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைதுசெய்துள்ளனர். இந்த கொலைக் குப் பின்னால் பழைய ரவுடியான கேட் நாகேந்திரன் இருப்பதாகவும், இவருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பிரதீப்ராஜின் தாய் டெல்லிராணி, "அந்த இன்ஸ்பெக்டர் தான் என் புள்ளைய துண்டுதுண்டா வெட்டிடுவேன்... திருச்செந்தூர் கடல்ல போட்டுடுவேன்..சுட்ருவேன்... தலைய துண்டாக்கிடுவேன்னு சொன்னாங்க... பண்ணிட்டாங்க!'' என்று கதறியது காண்போரை உலுக்கியது. இச்சம்பவம் குறித்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, "முதல்வர் விஜய் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், முதலில் கொடூரக்கொலைகள் நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது கதாநாயக சாகசத்தை காட்ட திட்டம் வைத்திருக்கிறாரா?'' எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி, "சி.எம்.ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னை ஒண்ணும் பண்ண முடியாது என திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் கூறியதாக கொலையாவதற்கு முன் பிரதீப்ராஜ் கூறியுள்ளார். போலீசாரே டம்மி சி.எம். என நினைக்கிறார்களா?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)