Crime, law and justice
சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரை: மதுரையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, அவற்றை பறிமுதல் செய்யக்கோரிய வழக்கில் டி.ஜி.பி., உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யாவிடில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.
மதுரை பிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை. மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது. விபத்துக்கள் ஏற்படுகின்றன. உணவு, குடிநீர், தங்குமிடம் இல்லாததால் வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் உட்பட இதர பொருட்களை உண்கின்றன. உடல்நலம் பாதித்து இறக்கின்றன. சாலை, பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய வேண்டும். கோசாலைகளுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். அக்கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விக்னேஷ் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து டி.ஜி.பி., கால்நடைத்துறை செயலர், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும். இவ்வாறு உத்தரவிட்டனர்.