Economy, business and finance
இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்
எண்ணுார்:எண்ணுாரில், 20 வயதுள்ள நிறைமாத கர்ப்பிணிக்கு, ஆட்டோவில் பெண் குழந்தை பிறந்தது.
பழவேற்காடைச் சேர்ந்தவர் சுந்தர், எல்.என்.டி., நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, கீர்த்தி, 20. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, கடந்த, 12 ம் தேதி, வளைகாப்பு நடந்துள்ளது. அக்., 6 ம் தேதி, குழந்தை பிறக்கும் என, மருத்துவர் தெரிவித்திருந்தார்.
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என, எண்ணுாரில் உள்ள சுந்தரின் அக்கா வீட்டில் கீர்த்தி வந்து தங்கியிருந்தார்.
நேற்று காலை, கீர்த்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மூலம் ராயபுரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். எண்ணுார் - அன்னை சிவகாமி நகர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, கீர்த்திக்கு பிரசவ வழி அதிகரித்து, பெண் குழந்தை பிறந்துள்ளது.
உடனடியாக, அன்னை சிவகாமி நகர் - ஆரம்ப சுகாதார மையத்தில், தாய் - சேய் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம், ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.