தேயிலை ஏலத்தில் விற்பனை; விலையில் ஏற்றம்: வரத்து குறைந்த போதும் வருவாயில் வளர்ச்சி
குன்னுார்: தென் மாநில தேயிலை உற்பத்தியில் வரத்து குறைந்த போதும், விற்பனையும், விலையும் ஏற்றம் கண்டது.
தென் மாநிலங்களில், குன்னுார், டீசர்வ், கோவை மற்றும் கொச்சி ஆகிய நான்கு தேயிலை ஏல மையங்களில் இலை மற்றும் துாள் ரகங்கள் கொண்ட, 37-வது தேயிலை ஏலம் நடந்தது. குன்னுார் ஏலத்தில், 15.64 லட்சம் கிலோ வந்ததில், 14.95 லட்சம் கிலோ விற்பனையானது.
சராசரி விலை கிலோவுக்கு, 123.40 ரூபாயாக இருந்தது. 18.45 கோடி ரூபாய் மொத்த வருவாய் இருந்தது.
தொடர்ந்து, 'டீசர்வ்' மையத்தில் ஒரு லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்ததில், 96 ஆயிரத்து 887 கிலோ விற்பனையானது. இங்கு கிலோவின் சராசரி விலை, 108.37 என இருந்தது. 1.05 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கோவையில், 4.38 லட்சம் கிலோ தேயிலை ஏலத்துக்கு வந்ததில், 3.80 லட்சம் கிலோ விற்னையானது. சராசரி விலையாக, 138.81 ரூபாய் இருந்தது. மொத்த வருவாய், 5.27 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சி ஏல மையத்தில், 9.65 லட்சம் கிலோ வந்தில் 8.75 லட்சம் விற்பனையானது. அதிகபட்சமாக சராசரி விலை கிலோவுக்கு, 160.79 என இருந்தது,14.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மொத்தம், 30.67 லட்சம் கிலோ வந்ததில், 28.47 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக, 38.84 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டப்பட்டது.
கடந்த 36வது ஏலத்தை விட இந்த ஏலத்தில் வரத்து குறைந்த போதும், விற்பனை, சராசரி விலை உயர்ந்தது. சராசரி விலையில் கிலோவுக்கு குன்னூரில் 3.43 ரூபாய், டீசர்வில் 85 பைசா, கோவையில் 11.87 ருபாய், கொச்சியில் 48 பைசா என உயர்வு கண்டது. அனைத்து மையங்களிலும் விற்பனை 84.17 சதவீதத்தில் இருந்து 92.80 சதவீதம் உயர்ந்தது. 37 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்த நிலையில் இந்த ஏலத்தில் 1.84 கோடி ரூபாய் உயர்வு கண்டது.
கடந்த ஆண்டின் 37வது ஏலத்தை ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த தேயிலை வரத்து சற்று குறைந்திருந்த போதிலும், விற்பனை அளவு, சராசரி விலை மற்றும் வருவாயில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.