Politics
விஜய் என்ற எல் நினோவால் அ.தி.மு.க., வெற்றி பறிபோனது முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு
தேனி: 'சட்டசபை தேர்தலில் விஜய் என்ற 'எல் நினோ'வால் அ.தி.மு.க., வெற்றி பறிக்கப்பட்டது,' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
தேனி வீரபாண்டியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதயகுமார் பேசியதாவது:
அ.தி.மு.க.,வுக்கு பலமான உள்கட்டமைப்பு உள்ளது. யார் விலகிச் சென்றாலும் கட்சி அழியாது. தி.மு.க., அ.தி.மு.க., இடையே தான் போட்டி இருந்தது. திடீரென ரூட் மாபியா, வலைதள பிரபலங்கள், குழந்தைகளை பயன்படுத்தி த.வெ.க., ஆட்சிக்கு வந்துவிட்டது.
வெறும் 35 சதவீத மக்கள் தான் த.வெ.க.,வை ஆதரித்துள்ளனர். மீதமுள்ள 65 சதவீதம் பேர் தன்னை ஆதரிக்கவில்லை என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.
மற்ற கட்சிகளிடம் இருந்து ஆட்களை பெற்று விஜய் ஆட்சி செய்கிறார். விசில் அடிக்க வைத்து போலி பிம்பத்தை விஜய் உருவாக்கினார். மக்கள் ஆட்சியில் அமர்த்தினாலும் தவறான செயல்களில் ஈடுபட்டால் துாக்கி எறிய தயங்கமாட்டார்கள். விஜய் என்ற 'எல் நினோ'வால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பறிக்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நிச்சயம் வெற்றிபெறும். லண்டன் சென்ற விஜய் யார் பின்னால் வேண்டுமானாலும் செல்லட்டும். ஆனால் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது கண்டனத்திற் குரியது என்றார்.
