விதி மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

விழுப்புரம்: விழுப்புரம் நான்குமுனை சிக்னல் சந்திப்பில் விதிமுறை மீறி தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நான்குமுனை சிக்னல் சந்திப்பு வழியாக, புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருக்கோவிலுார் மார்க்கங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு வாகனங்கள் நின்று செல்வதற்கு குறிப்பிட்ட வினாடிகள் ஒதுக்கப்பட்டு சிக்னல் போடப்படுகிறது. ஆனால், இங்கு சிக்னல் போடப்பட்டிருந்தாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விதிமுறை மீறி தாறுமாறாக சென்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்னலுக்கு அருகில் டிராபிக் காவல் நிலையம் செயல்பட்டாலும், இங்கு நடந்துவரும் போக்குவரத்து விதிமீறலை போலீசார் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நான்குமுனை சிக்னலில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.