மூணாறில்ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்
மூணாறு:மூணாறு நகரில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊராட்சி நிர்வாக 40 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தது.
சுற்றுலா நகரான மூணாறில் நடைபாதை, வழியோரம் ஆகியற்றை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால், பாதசாரிகள் நடந்து செல்ல இயலாமல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை எவ்வித நிபந்தனைகள் இன்றி அகற்றுமாறு உத்தரவிட்டது. அதன்படி மூணாறு நகரில் மார்க்கெட் உள்பட பல பகுதிகள், மாட்டுபட்டி ரோடு, தபால் அலுவலகம் ஜங்ஷன், தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் அருகில், பழைய மூணாறு ஆகிய பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் உள்ள 40 கடைகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு மூணாறு ஊராட்சி செயலர் ரம்ஷாத் நோட்டீஸ் அளித்தார். அல்லாத பட்சத்தில் ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.