’ரொம்ப காஸ்ட்லியான விவாகரத்து’; வரலாற்றிலேயே முதல் முறை

தென்கொரியாவின் பிரபல ’ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் உரிமையாளர் குவான் ஹியுக் பின் ஆவார். இந்த நிறுவனத்தில், ’கிராஸ்ஃப்யர்’ மற்றும் ’லாஸ்ட் ஆர்க்’ போன்ற உலக புகழ்பெற்ற கேம்கள் உருவாக்கப்பட்டன.
குவான், கடந்த 2001 ஆம் ஆண்டு லீ ஹ்வா ஜின்னை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்துவேறுபாடு காரணமாக இவர்கள் திருமண உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த 2022 ஆண்டு விவாகரத்து மற்றும் சொத்து பிரிப்பு கோரி சியோலில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் லீ வழக்கு தொடர்ந்தார்.
நான்கு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், குவான் -லீ தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 35 விழுக்காட்டுப் பங்கு 2.5 டிரில்லியன் வான் (தோராயமாக ரூ.17,000 கோடி), அவரது முன்னாள் மனைவி லீ ஹ்வா-ஜின்னுக்கு மாற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இருவருமே முன் வந்து திருமண முறிவிற்குப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனிப்பட்ட ஜீவனாம்ச கோரிக்கைகள் எதுவும் முன் வைக்கப்படவில்லை.
இருப்பினும், மனைவிக்குப் பங்குகளைப் பிரித்துக் கொடுப்பதற்கு குவான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு, கடந்த 2002 ஆம் ஆண்டு நிறுவனம் தொடங்கப்பட்டபோது லீ நிதி உதவி செய்துள்ளார் என்றும், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குநராக பணியாற்றி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார் என்றும் மனைவியின் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பங்கு பிரிப்பு என்பது முற்றிலும் நியாயமானது என்று உறுதிப்படுத்தியது. தென்கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கில் வழங்கப்பட்ட மிக அதிகப்படியான தொகை இதுவாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)