மானாவாரி நிலத்தில் விதைப்பு பணி மும்முரம்
பேரையூர்: பேரையூர் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் பேரையூர், சின்னப்பூலாம்பட்டி, மத்தகரை, சேடப்பட்டி, அத்திபட்டி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விதைப்புபணிகள் துவங்கி உள்ளன.
ஆடிப்பட்டத்தில் விதைத்த விதைகள் முளைக்காமல் எறும்புகளுக்கும் மயில்களுக்கும் உணவாகி விட்டன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையை பயன் படுத்தி மக்காச்சோளம், சோளம், பருத்தி, குதிரைவாலி, கம்பு, பாசி, உளுந்து உள்ளிட்டவற்றை விதைத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ''கோடை உழவு செய்து நிலத்தை தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆடிப்பட்டத்தில் விதைத்தோம். மழை இல்லாமல் விதை முளைக்கவில்லை. தற்போது மழை பெய்து நிலம் ஈரமாக உள்ளதால் விதைத்து வருகிறோம்'' என்றனர்.
பனை விதை நடவு சோழவந்தான் வடகரைக் கண்மாயில் பனைவிதைகள் நடப்பட்டன. நெடுங்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார். கழுங்குப் பகுதியில் 2 கி.மீ. நீளத்திற்கு பத்தாயிரத்திற்கும் கூடுதலான பனை விதைகள் நடப்பட்டன. பனை மரங்கள் அழிவதை தடுக்கவும்,நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இம்முயற்சி எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கோச்சடை எம்.எம்.டி., வாலிபால் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.