எழுத்தாளர் விட்டல்ராவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது

திருநெல்வேலி: எழுத்தாளர், ஓவியர், புகைப்படக்கலைஞர், கலை விமர்சகர் கி.விட்டல்ராவுக்கு 2026ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1942ல் ஓசூரில் பிறந்த விட்டல்ராவ் சென்னை ஓவியக் கல்லூரியில் நுண்கலை பயின்றவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தில் பன்முகப்பங்களிப்பை செய்துள்ளார். 'போக்கிடம்', 'நதிமூலம்', 'வண்ணமுகங்கள்' உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். 'தமிழகத்துக் கோட்டைகள்' உள்ளிட்ட நூல்கள் மூலம் வரலாறு, கலை, சினிமா குறித்தும் பதிவு செய்துள்ளார்.
ஓவியம், புகைப்படம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளிலும் பங்களித்துள்ளார். தமிழ் படைப்புலகில் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மூத்த படைப்பாளியாக திகழ்கிறார்.
2010 முதல் வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது, மூத்த இலக்கிய ஆளுமைகளை கவுரவித்து வருகிறது. இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், கலைநயமிக்க விருதுச் சிற்பமும் வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் இறுதியில் கோவையில் நடக்கிறது.