Politics
“நா.த.க என்பது ஒரு கட்சி அல்ல... கும்பல்!” - கடுப்பில் கொந்தளிக்கும் களஞ்சியம்

நா.த.க ஆதரவாளராக அறியப்பட்ட நான், ஏற்கெனவே தனியொரு இயக்கம் கண்டு தொடர்ந்து அதை வழிநடத்தியும் வந்தேன்.
‘நாம் தமிழர் கட்சி’யிலிருந்து விலகிய இயக்குநர் மு.களஞ்சியம் நீண்ட அமைதிக்குப் பிறகு மௌனம் கலைத்திருக்கிறார். அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...
“நா.த.க-விலிருந்து வெளியேறிவிட்டீர்கள். ஆனாலும், செய்தியாளர்களைச் சந்திக்காமல் ஒதுங்கியே இருக்கிறீர்களே...’’
“செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது எனத் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. நாம் பயணிக்கும் ஓர் இயக்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட பிறகு, தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அண்மைக்காலமாக நா.த.க-வில் ஏற்பட்டுள்ள மாற்றம், மாற்று அரசியல் தலைவர்கள்மீதான அவர்களது விமர்சனம் எனக்கு வருத்தத்தைத் தந்தது.
மாற்றுக் கருத்துகொண்ட சொந்தக் கட்சியினரைக்கூட, நா.த.க-வின் முன்னணி உறுப்பினர்கள் மிகக் கடுமையாக விமர்சிப்பது உள்ளிட்ட வெறுப்பரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. நாம் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுக்கும் உகந்ததல்ல. எனவே, கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன். இது குறித்து அப்போதே நான் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்திருந்தேன்.”
“நா.த.க உடனான பயணத்தில் எங்கே முரண்பாடு ஏற்பட்டது?”
“பொதுவாக, தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் தோல்வி குறித்துக் கலந்தாய்வு செய்து தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும். ஆனால், தொடர் தோல்வியைச் சந்தித்துவரும் நா.த.க-வில் இப்போது வரை தேர்தல் தோல்வி குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். உடனே நா.த.க-வின் முன்னணி நிர்வாகிகளே என்னைத் திட்டத் தொடங்கிவிட்டனர்.
‘நான் தொடங்கிய இந்தக் கட்சிக்கு நான்தான் அப்பன். பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். விருப்பமிருந்தால் இரு... இல்லையென்றால் வெளியேறிவிடு’ என்பதுதான் சீமானின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆக, கட்சிக்குள் சீமான் வைத்ததுதான் சட்டம். அவரை எதிர்த்து எந்தவொரு கருத்தையும், யாரும் முன்வைக்க முடியாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நா.த.க என்பது ஒரு கட்சி அல்ல... கும்பல். எனவே, முரண்பாட்டோடு பயணிக்க முடியாமல் வெளியேறிவிட்டேன்.”
“10 வருடங்களுக்கும் மேலாக நா.த.க-வுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான், ‘அந்தக் கட்சி கும்பல்’ என்று தெரியவந்ததா?”
“நா.த.க ஆதரவாளராக அறியப்பட்ட நான், ஏற்கெனவே தனியொரு இயக்கம் கண்டு தொடர்ந்து அதை வழிநடத்தியும் வந்தேன். இந்த நிலையில், 2024-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம்தான் நா.த.க-வில் முறையாக உறுப்பினர் அட்டை பெற்று கட்சியில் இணைந்தேன்.
ஆக, தனியே இயக்கம் கண்ட அனுபவத்தில், ஓர் அரசியல் கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் குறித்து ஆக்கபூர்வமாகக் கட்சிக்குள் கேள்விகள் எழுப்பினால், சொந்தக் கட்சியினரையே நாகரிகமற்ற வகையில் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
தேர்தலில் வெற்றிபெறுவது நா.த.க-வின் நோக்கமல்ல என்பதை, 2026 தேர்தலில் தெளிவாகத் தெரிந்துகொண்டேன். ‘எந்தக் கட்சிக்கு எதிராக வாக்குகளைப் பிரிக்க வேண்டும்’ என்ற கணக்குகளோடு, அதற்கேற்ற வகையில் வேட்பாளர்களைச் சம்பந்தமே இல்லாத தொகுதிகளில் நிறுத்துவார்கள். இதன் பின்னணியில் பெரிய லாப, நட்டக் கணக்கு இருக்கிறது. ஆக, தமிழ்த் தேசியம் என்ற பெயரில், சீமானின் தனிப்பட்ட சுயலாப அரசியலுக்கு, நாம் பலியாக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.”
“அப்படியென்றால், தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”
“உண்மையான தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கும் பணியில் புதிதாக ஓர் இயக்கத்தையும், அதற்கான கொள்கைகளையும் எனது தலைமையில் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுக்கும் பணியும், கட்சியைப் பதிவுசெய்யும் பணியும் தற்போது நடைபெற்றுவருகின்றன. இது நா.த.க-வுக்கு எதிரான கட்சியாகவோ அல்லது சீமானைத் திட்டித் தீர்ப்பதற்கான கட்சியாகவோ இருக்காது. அது எங்கள் நோக்கமும் அல்ல.”
“தமிழக அரசியல் களத்தில் நா.த.க-வும் இந்தக் கொள்கைகளோடுதானே களமாடிவருகிறது..?”
“அப்படியல்ல... ஈழத் தமிழர் பிரச்னைக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதையாவது, நா.த.க இதுவரை முன்னெடுத்திருக்கிறதா... ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை, மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தடையை நீக்குவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் எதையாவது நா.த.க செய்திருக்கிறதா... ‘கச்சத்தீவை மீட்பதற்காக நெய்தல் படை கட்டுவேன்’ என்று எந்தப் புரிதலும் இல்லாமல் சீமான் வீர வசனம் பேசிவருவதெல்லாம் கேலிக்கூத்தானது.
இந்த விவகாரங்களிலெல்லாம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சரைச் சந்தித்து அழுத்தம் கொடுப்பது, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம். குறிப்பாக, ஈழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில், திட்டங்கள் வகுத்து ஐ.நா சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.”
“ஆனால், த.வெ.க-வில் இணைவதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் பலிக்காததையடுத்தே, தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்கிறார்களே?”
“நா.த.க-விலிருந்து நான் வெளியேறியதுமே, ‘த.வெ.க-வில் காசு வாங்கிவிட்டார்கள்’, ‘பனையூரில் விஜய் காலை நக்கவேண்டியதுதானே...’ என்றெல்லாம் ஏற்கெனவே நா.த.க-வின் ஐடி விங்கிலிருந்து என்னை விமர்சித்துவிட்டார்கள். எனவே, இது போன்ற அவதூறுகளைக் கண்டுகொண்டால், அது எங்களை நாங்களே தாழ்த்திக்கொள்வது போன்றது!”
