Arts, culture, entertainment and media
நடிகர் சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு.. காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர்கள் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முகநூலில் வெளியான வீடியோவில், நடிகர் சிவகுமார், மகன்கள் சூர்யா, கார்த்தி மற்றும் மருமகள் ஜோதிகா உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் புகார் அளித்தார்.
மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் குறித்தும் இழிவான கருத்துகள் இடம்பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் குடும்பத்தினர் அகரம் அறக்கட்டளை மற்றும் விதை திட்டம் மூலம் கல்விப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் அவதூறு பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாசர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, பெண்ணை அவமதிக்கும் செயல் மற்றும் வேண்டுமென்றே அவமதித்தல் உள்ளிட்ட 2பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்களை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், அவதூறு வீடியோவை வெளியிட்ட பெண் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
