Politics
"பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்காவிட்டால் கூட்டணி எதற்கு?” - செல்வப்பெருந்தகை கேள்வி

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்காவிட்டால் கூட்டணி எதற்கு என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் கூறி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி? என்று கேள்வி எழுப்பினார்.
புதிய தலைமைச் செயலகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, "எந்தப் பகுதியில் திட்டம் வருகிறதோ அந்தப் பகுதி மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பரந்தூருக்கு சென்று கருத்து கேட்டவர்கள் புதிய தலைமை செயலகத்தில் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பதவி விலகி மீண்டும் போட்டியிடுவதா? இடைத்தேர்தலுக்கு தடைகோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி
பரந்தூர் விமான நிலையத்தை வேண்டாம் என எப்படிக் கைவிட்டாரோ அதேபோன்று பட்டினப்பாக்கம் மீனவர்களையும் கேட்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தாலும் ஆளுமையுடன் கேள்வி கேட்கிறார்கள். அதேபோன்று கூட்டணி கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தினார்.
