Arts, culture, entertainment and media
போலீசார் எட்டி உதைத்ததில் உ.பி.,யில் கர்ப்பிணி பலி?
பெரோஷாபாத்: உத்தர பிரதேசத்தில், திருட்டு வழக்கில் சந்தேகிக்கப்பட்ட கணவரை கைது செய்ய வந்த போலீசாரை, அவரது கர்ப்பிணி மனைவி தடுத்தார். அப்போது போலீசார் எட்டி உதைத்ததில், கர்ப்பணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உ.பி.,யின் பெரோஷாபாத் மாவட்டத்தின் லபாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரவ், 32. இவரை திருட்டு வழக்கில் சந்தேகித்த போலீசார், கைது செய்ய கடந்த, 13ல் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது, கணவரை கைது செய்ய வேண்டாம் என, அவரது கர்ப்பிணி மனைவி அஞ்சலி, 28, தடுத்தார்.
ஆத்திரமடைந்த எஸ்.ஐ., தரம்பால் சிங், அவரது வயிற்றில் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அஞ்சலியை அப்பகுதி மக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் காலை, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும், பிரசவத்துக்கு பின் உடல்நிலை மோசமடைந்ததால், அஞ்சலி உயிரிழந்தார். அஞ்சலியின் இறப்புக்கு போலீசாரே காரணம் எனக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தரம்பால் சிங், சத்யபால் சிங் ஆகிய இரு எஸ்.ஐ.,க்கள் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.