பிரீமியம் வசதிகள்: வாய் பிளக்க வைத்த அரசு பஸ்

கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ள பிரீமியம் பஸ்சில் இருக்கும் வசதிகள், பயணியரை வாய் பிளக்க வைப்பதாக உள்ளன. காரணம், விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் அந்த பஸ்சில் செய்யப்பட்டு உள்ளன. பிளஷ் லெதர் இருக்கைகள், அவற்றில் இன்பில்ட் ஸ்கிரீன், வாஷ் ரூம், இலவச வைபை, சார்ஜிங் போர்ட்டல் ஆகியவை பஸ்சில் இருக்கின்றன.
சாப்பிடுவதற்கு காபி, டீ மட்டுமின்றி, ஷவர்மாவும் கிடைக்கும். இதற்கென தனியாக, பணிப்பெண்களும் பஸ்சில் இருக்கின்றனர். இந்த பஸ் சேவை, முதல் கட்டமாக, கொச்சி - திருவனந்தபுரம் இடையே தொடங்கியுள்ளது. பஸ்சில் இருக்கும் வசதிகள் பற்றிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரம் என்பது ரம் அல்ல!
'ஓல்டு மங்க் ரம்' என்பது உண்மையில் ரம் கிடையாது என, மும்பை உயர் நீதிமன்றத்தில், உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது, மது பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தயாரிப்பு பார்முலா, லேபிள் அடிப்படையில், அதை ரம் என்று விற்பனை செய்யக்கூடாது என்பது ஆணையத்தின் வாதம். 'அது ஒரு நியூட்ரல் ஸ்பிரிட், அதில் ரம் பிளேவர் மட்டும் சேர்க்கப் படுகிறது. அதை ரம் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால், ' rum flavoured spirit ' என்று கூறிக்கொள்ளலாம் என்பது ஆணையத்தின் கருத்து.
இந்த தகவல் பரவியதும், இணையம் எங்கும் ஓல்டு மங்க் ஜோக்குகளும், மீம்ஸ்களும் தெறிக்கத் தொடங்கின. 'ஓல்டு மங்க்' பிரியர்கள் கண்ணீர் வடிப்பது போன்ற படங்கள், சமூக வலைதளங்களை நிறைத்தன. 'இத்தனை காலம் அதை ரம் என்று நம்பிய என் வாழ்க்கையே பொய்யாகி விட்டது' என்று ஒருவரும், 'இப்போது ரம், டிரம் போல ஒலி எழுப்புகிறது' என்று இன்னொருவரும், 'ஹே ரம்' என்று பலரும் மாற்றி மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இறந்த கரோலின் என்ற, 70 வயது பெண்ணின் உடல், காளான் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட செய்தி, இணையத்தில், 'டிரெண்டிங்' ஆகியுள்ளது. இந்த சவப்பெட்டி, வளர்க்கப்பட்ட காளான்களை கொண்டு தயார் செய்யப்பட்டது. லுாப்டெக் என்ற டச்சு நிறுவனம், காளான்களை சவப்பெட்டிக்காக வளர்த்து கொடுத்துள்ளது.
'உலோகம் அல்லது மரத்தால் செய்த சவப்பெட்டிகள் மட்குவதற்கு பல்லாண்டுகளாகும். ஆனால், இந்த சவப்பெட்டியில் இறந்தவர் உடல் இயற்கையான காளானில் வைக்கப்படுவதால், வெகுவிரைவில் மட்கி மண்ணோடு மண்ணாகி விடும்' என்கின்றனர், அந்த நிறுவனத்தினர்.
தவறாக பேசக்கூடாது!
இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க, 'டாட்டூ' கலைஞர் ஜெமா பெரர் ஜூல்கா, 'இந்தியா பற்றிய எண்ணத்தை பிற நாட்டினர் மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று கூறுகிறார். ஒரு காலத்தில் இந்தியா, ஜவுளி உற்பத்தியில் வல்லரசாக இருந்தது. இங்கு உற்பத்தியான பருத்தி, பட்டு, மஸ்லின் ஆடைகள் உலகில் மிகச்சிறந்ததாக, அனைவரும் விரும்புபவையாக இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே, அப்போதைய இந்திய தொழில் துறையின் வீழ்ச்சிக்கு காரணம்' என்கிறார் ஜெமா.
'இந்திய கலாசாரத்தை கொண்டாடிக் கொண்டே, அதை பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை பற்றி மோசமாக பேசுவது தவறானது. வறுமை, மோசமான சுகாதாரம் என இந்தியா பற்றிய மோசமான சித்தரிப்புகள் எல்லாம் உண்மையல்ல' என்று திட்டவட்டமாக கூறும் ஜெமாவின் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் பரவி வருகின்றன.
வைரல் வீரன் 'மாபு'
ஹிமாச்சல் மாநிலம், ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பவுத்த மடாலயத்துக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர், அங்கு நடந்த விளையாட்டு போட்டியை கண்டு ரசித்து எடுத்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது. மைதானம் ஒன்றில் இளம் பவுத்த துறவியர் கால்பந்து விளையாடுகின்றனர். அவர்களுடன் ஒரு கோல்டன் ரெட்ரீவர் நாயும் சேர்ந்து விளையாடுகிறது.
'மாபு' என்று பெயரிடப்பட்ட அந்த நாய், ஆட்டம் முழுவதும் உள்ளே புகுந்து பந்தை துரத்தித் துரத்திப் பிடிக்கிறது. 'சபாஷ்' போட வைக்கும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், கால்பந்து வீரன், 'மாபு'வை பாராட்டி புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.