திண்டிவனத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே 18 தினங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டசம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே கிராண்புரம் அருகே நடுவனந்தல்புதுாரில், கடந்த ஆக., 18 ம் தேதி புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
செஞ்சி பகுதியிலுள்ள ஜம்போதி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடி அந்த கடையை நடுவனந்தல்புதுாரில் திறக்கப்பட்டதற்கு, கிராண்டிபுரம், நடுவனந்தல், புதுார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகம் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
இதன் பிறகு கடந்த ஆக., மாதம் 23 ம் தேதி சண்முகம் டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று, புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
சட்டசபை கூட்டம் முடிந்துள்ள நிலையில், பல தினங்களாக, திறக்கப்படாமல் மூடிக்கிடந்த நடுவனந்தல்புதுார் டாஸ்மாக் கடை, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஜோதி உள்ளிட்டோர் பாதுகாப்புடன், நேற்று மதியம் 12:00 மணியளவில் திறக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடை முன்பு தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
சண்முகம் எம்.எல்.ஏ., மற்றும் கிராம பொது மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக், மீண்டும் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.