Crime, law and justice
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் அரசியல்வாதிகள் டாக்டர்களை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம்கோர்ட் வலை தெரிவித்தது. அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாகக் கூறி சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல், பெண் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களைக் கடந்த ஜூலை மாதம் கொடூரமாகத் தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ரமேஷ் மத்ரேவுக்கு விசாரணை நீதிமன்றம் முதலில் ஜாமின் வழங்கியது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ஜாமினுக்குத் தடை விதித்ததுடன் ரமேஷ் மத்ரேவைச் சரணடைய உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அரசியல் பலம் மற்றும் பதவியை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
கும்பலாக வந்து தாக்கும் போது டாக்டர்கள் அடையும் மன உளைச்சலையும், அச்சத்தையும் நினைத்துப் பாருங்கள் என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர். பிறகு ரமேஷ் மத்ரே தரப்பு தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இதற்கிடையே ரமேஷ் மத்ரேவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை முழுமையாக ரத்து செய்யக் கோரி மஹாராஷ்டிர அரசு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கின் அடுத்த விசாரணையை வரும் செப்டம்பர் 28ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.