Crime, law and justice
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்.. ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட தலை.. அதிர்ச்சி சம்பவம்

காதல் மனைவியின் கைவிரல்களை வெட்டி உடலை ரெண்டு துண்டாக்கி கொன்ற கொலையின், பின்னணி என்ன?
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே மனைவியைக் கொன்று தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த சைக்கோ கணவனை, போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் பாசிஸ்தாபூர் பைலேனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், இளம் தம்பதி வசித்து வந்த வீட்டில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே இரு காவலர்கள் மட்டும் சம்பவ வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீடு முழுக்க ரத்தக்கறைகளுடன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் நடு வீட்டில் கிடந்துள்ளது. உடனே உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்து சம்பவ வீட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பெண்ணின் உடலை கைப்பற்றி வீடு முழுக்க நடத்தப்பட்ட தேடுதலில் துண்டிக்கப்பட்ட தலை, கருப்பு நிற பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிரண்டு போனார்கள்..
பெண்ணின் கை, கால் விரல்களும் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தன. தொடர் தேடுதலில் கூர்மையான ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. மேலும் அறையினுள் பல மதுபாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன. என்ன நடந்தது ? இப்படியொரு கொடூரக் கொலையை அரங்கேற்றியது யார்? என்ற கேள்விகளுடன் போலீசார் விழிபிதுங்கி நிற்கும் போது கொலை செய்யப்பட்ட பெண் இதே வீட்டில் கணவர் ராமானுஜன் கோஸ்வாமியுடன் வசித்து வந்த 25 வயதான ரியா என்பதும், அவரது கணவர் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.
தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் கிடைத்த தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஃபேன்சி பஜாரில் வேலைப் பார்த்து வந்த ரிய 'ஊபர்' ஓட்டி வந்த ராமானுஜனை 6 மாதங்களுக்கு முன் தான் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் பலமுறை தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடால் தகராறு ஏற்பட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் மூலம் தெரியவந்தது.
இதனால் ரியாவை கொலை செய்தது அவரது கணவரா? என்ற சந்தேகத்தில் அவரை தேட ஆரம்பித்தனர். அப்பொழுதுதான் ராமானுஜன் கோஸ்வாமி, கவுகாத்தியின் ஹதிகான் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் மனைவியைக் கொன்று தலையை துண்டித்து பிரிட்ஜில் வைத்து விட்டு தப்பிச் சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். தாய், தந்தை இல்லாமல் வளர்ந்த மனைவி ரியாவை ஈவு இறக்கமின்றி கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய ராமானுஜனைப் பலத்த பாதுகாப்புடன் விசாரித்து வருகின்றனர்.
2022-ல் டெல்லியில் லிவின் ரிலேஷன்ஷிப்பில் வசித்த ஷ்ரத்தா வால்கரை ஆஃப்தாப் அமீன் என்பவர் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவத்தைப் போலவே தற்போது அசாமியில் ரியா கொலையும் அரங்கேறி உள்ளது. விசாரணையின் முடிவிலேயே அசாமை உலுக்கிய ரியா கொலையின், முழு பின்னணியும் வெளிவரும்..
