Politics
'25,000 மாணவர்கள், 9 மீனவ கிராமங்களின் கதி என்ன?'- அதிமுக ஜெயக்குமார் கேள்வி

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய பிரம்மாண்ட தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்குத் தற்போதைய தவெக அரசு திட்டமிட்டு நிலங்களைத் தேர்வு செய்துள்ளது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு சென்னை மக்களிடையேயும், குறிப்பாகக் கடலோர மீனவப் பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இந்தத் திட்டத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சென்னையின் பூர்வகுடி மக்களான மீனவர்கள் ஆதிகாலம் தொட்டே நொச்சிக்குப்பம், நொச்சிநகர், செல்வராஜ் நகர், டுமிங் குப்பம், முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள லூப் சாலையில் வார இறுதி நாட்களில் ஒட்டுமொத்தச் சென்னை மக்களுமே வந்து மலிவான விலையில் மீன் உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இப்போது இந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு வந்தால், பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் லைட்ஹவுஸ் மற்றும் கிரீன்வேஸ் சாலை முனைகளிலேயே போலீசார் பேரிகேட் போட்டு ஒட்டுமொத்தப் பகுதியையும் முடக்கிவிடுவார்கள் . இதனால் 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி கலன்களின் வாழ்வாதாரமும், மீனவர்களின் தொழிலும் முற்றிலுமாகப் பறிபோய்விடும்.
மறுபுறம், இப்பகுதியின் மேற்குப் பக்கத்தில் சாந்தோம் சாஸ்திரி பள்ளி, செயின்ட் பீட்ஸ், செயின்ட் ஆண்டனிஸ், ரோசரி மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட புகழ்பெற்ற பள்ளிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்போதே காலையிலும் மாலையிலும் இங்கு ஒரு வண்டியைக்கூட நகர்த்த முடியாத அளவிற்குப் பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் விவிஐபி-க்கள் வந்து செல்லும் தலைமைச் செயலகத்தையும் இங்கு கொண்டு வைத்தால், பள்ளி மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
படித்த இளைஞர்களுக்குத் தேர்தல் வாக்குறுதிப்படி 4,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவோ, அரசுப் பள்ளிகளில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவோ பணமில்லை என்று நாடகமாடுகிறார்கள். ஆனால், 1,200 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் தேவையில்லாமல் ஒரு புதிய செயலகம் கட்ட இவர்களுக்கு எப்படிப் பணம் வந்தது? ஒட்டுமொத்த நாடாளுமன்றமே 900 கோடியில் கட்டப்பட்ட நிலையில், இவர்களுக்கு 1,200 கோடி எதற்கு? அரசுக்குத் திறந்தவெளியான மாற்று இடம் வேண்டுமென்றால், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான குடியிருப்பு மற்றும் நெரிசல் இல்லாத இடத்தைப் பயன்படுத்தலாமே? அதை விடுத்து, ஒன்பது மீனவக் கிராமங்களையும், 25,000 மாணவர்களையும் பந்தாடும் வகையில் பட்டினப்பாக்கத்தைக் குறிவைப்பது ஏன்?" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)