திருத்த மசோதா கூட்டுக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம்
புதுடில்லி:எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பார்லி., கூட்டுக் குழுவில், சிறப்பு அழைப்பாளர்களாக ராஜ்யசபா எம்.பி.,க்கள் இருவரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார். இது மிகவும் அரிதான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகள், அதன் சொத்துக்களை நிர்வகிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதாவை பார்லி.,யில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பார்லி., கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்ய லோக்சபாவில் இருந்து 21 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவில் இருந்து 10 எம்.பி.,க்கள் என 31 எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., - எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான இக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
இந்நிலையில், கூட்டுக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ஜேம்ஸ் பங்சங் காங்கால் சங்மாவை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நியமித்தார்.
இது குறித்து லோக்சபாவின் முன்னாள் பொதுச் செயலர் ஆச்சாரி கூறியதாவது:
லோக்சபா விதி 299-ன்படி குழுவில் உறுப்பினராக இல்லாத எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் குழுவில் கருத்துகளை கூறவோ, உறுப்பினர்களுடன் அமர்ந்து செயல்படவோ முடியாது. அதே சமயம், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட எம்.பி.,க்களை சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்க இந்த விதி வகை செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.