Politics
Exclusive | “மாற்று சபாநாயகர் சத்யபாமாவுக்கு வாழ்த்துகள்… உண்மையை திரித்துப் பேசுவது சரியில்லை” – லீமா ரோஸ்...

சத்யபாமா முதல் பெண் சபாநாயகர் என்பது உண்மைக்கு புறம்பானது, பொன்னம்மா, லீமா ரோஸ் போன்றோர் முன்னரே அவையை வழிநடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2ஆம் தேதி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அவையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகிய இருவருமே இல்லாத சூழலில், மாற்று சபாநாயகர் பட்டியலில் இருக்கும் சத்யபாமா அவையை வழிநடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சத்யபாமாதான் முதல் பெண்ணாக அவையை வழிநடத்தியுள்ளார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில், அவருக்கு முன்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மா உள்ளிட்ட ஏராளமானோர் அவையை வழிநடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அப்படி மாற்று சபாநாயகராக இருந்து அவையையும் நடத்திய சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் நியூஸ்18க்கு இது குறித்து பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தவெக பெண் எம்.எல்.ஏ. மாற்று சபாநாயகராக அமர்ந்து அவையை வழிநடத்தியிருக்கிறார் என்பதை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், அவர்தான் முதல் பெண் எனும் உண்மைக்குப் புறமான செய்தியை பரப்பிவருகிறார்கள். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மா, நான் (லீமா ரோஸ் சிபிஎம்) உள்ளிட்ட ஏராளமான பெண்கள் மாற்று சபாநாயகர்களாக அவையை வழிநடத்தியிருக்கிறோம்.
2006 – 2011 ஆட்சி காலத்தில், மாற்று அவைத் தலைவர் பட்டியலில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த லீமா ரோஸ் ஆகிய நானும் இருந்தேன். குறிப்பாக 2009ஆம் ஆண்டு சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நானே மாற்று சபாநாயகராக அமர்ந்து அவையை வழி நடத்தியுள்ளேன்.
அந்தக் காலத்தில் சிபிஐ பத்மா, காங்கிரஸ் யசோதம்மா உள்ளிட்டவர்களும் மாற்று அவைத் தலைவர் பட்டியலில் இடம் பெற்று, அவையையும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வழிநடத்தியுள்ளனர். எனவே ஒரு விஷயத்தைப் பாராட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதேசமயம் வரலாற்றில் என உண்மையை திரித்துச் சரியில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


