திருநெல்வேலி அரசு பேருந்து சேவை தினமும் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பேருந்து சேவை, தற்போது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பேருந்து சேவையை தினமும் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு, 2024 மார்ச் முதல் அரசு விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. தடம் எண்: ‘180பி’ என்ற அரசு விரைவு பேருந்து, திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தினமும் மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, 13 மணி நேர பயணத்திற்கு பின் திருநெல்வேலியை சென்றடைகிறது.
திருநெல்வேலியில் இருந்து, மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருவள்ளூர் வந்தடையும். இதனால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், தினமும் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை, தற்போது திங்கள், வெள்ளி என, இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து துறையினர் கூறுகையில், ‘சில நாட்களில், திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலி மார்க்கத்தில் செல்லும் பயணியர் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதனால், பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
இதனால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்ட மக்கள், தங்கள் ஊருக்கு செல்ல, இரண்டு மூன்று பேருந்துகளில் பயணித்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு, தினமும் விரைவு பேருந்து இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.