ஈரோடு – பழநி ரயில் பாதை திட்டம் கைவிடப்படுகிறதா?
திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து தொப்பம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கயம், சென்னிலை, ஈங்கூர் வழியாக ஈரோட்டுக்கு 91.5 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க 1980-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
முதல் கட்ட சர்வேயில் 6 பெரிய பாலங்கள், 42 சிறிய பாலங்கள், 23 ரயில்வே கேட்கள் அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டது. ஆனால், நில ஆர்ஜிதம், நிலம் கையகப்படுத்துதல், சர்வே கற்கள் நடுதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் எதுவும் துவங்கவில்லை. கடந்த 2011-ல், 40 கோடியும், 2023ல் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதுவரை 1.48 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டபோது 603 கோடியாக இருந்த மதிப்பீடு, தற்போது 1,140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தெற்கு ரயில்வே ஊழியர் சங்க முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் சேலம் – கரூர் – திண்டுக்கல், ஓசூர் – ஓமலுார் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு – பழநி திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டம் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளமாக ஆண்டுதோறும், 1,000 ரூபாய் ஒதுக்குவது வழக்கம். அதுவும் இம்முறை ஒதுக்கப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில் இத்திட்டம் உயிர்ப்புடன் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.