டில்லியில் குடியேற்ற சோதனையின்றி புறப்பட்டு சென்ற இத்தாலியர்கள்; ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில், குடியேற்ற சோதனையை முடிக்காமல் மூன்று இத்தாலியர்கள் ஜெர்மனியின் மியூனிக் நகருக்கு சென்ற சம்பவம் தொடர்பாக, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரியிடம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து டில்லி வழியாக ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிக்கிற்கு மூன்று இத்தாலியர்கள் செப். 4ல் பயணித்தனர். அமிர்தசரஸ் - டில்லிக்கு 'ஏர் இந்தியா' விமானத்திலும், டில்லியில் இருந்து மியூனிக்கிற்கு, 'லுப்தான்சா' விமானத்திலும் முன் பதிவு செய்திருந்தனர்.
டில்லி வந்திறங்கிய அவர்களை ஏர் இந்தியா ஊழியர்கள், குடியேற்ற சோதனையை முடிக்காமல், சர்வதேச விமானங்களுக்கான இணைப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விமான நிலைய நடைமுறையில் ஏற்பட்ட தீவிர பாதுகாப்பு மற்றும் குடியேற்ற விதிமீறலாக இது கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது. உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையிலான கூட்டத்தில், 'ஏர் இந்தியா' குழும தலைமை நிர்வாக அதிகாரி பி.பாலாஜி, விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், குடியேற்ற துறை கமிஷனர், டில்லி விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்பது அம்சங்கள் குறித்து 'ஏர் இந்தியா'விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு செப். 19க்குள் பதில் அளிக்க அவகாசம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: டில்லி விமான நிலையத்தில் பயணியரை கையாள்வதில் ஈடுபட்ட. 'ஏர் இந்தியா' மற்றும் 'சாட்ஸ்' நிறுவன ஊழியர்கள் ஏன் சர்வதேச இணைப்பு பகுதிக்கு அனுமதியின்றி பயணியரை அழைத்துச் சென்றனர். இதில் அவர்களின் பங்கு என்ன?
இந்த பயணம், 'ஹப் மற்றும்- ஸ்போக்' எனப்படும் சிறிய விமான நிலையங்களை மையமான பெரிய விமான நிலையத்துடன் இணைக்கும் நடைமுறையின் கீழ் வராத நிலையில், டில்லியில் புறப்படும், 'லுப்தான்சா' விமானத்துக்கான, 'போர்டிங் பாஸ்' அமிர்தசரசிலேயே ஏன் வழங்கப்பட்டது? இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.