சொந்த கட்டடம் இல்லாமல் அரசு துறைகள் தவிப்பு:காலியான கட்டடங்களை ஒதுக்குவது அவசியம்
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு தாலுகாவிலும் காலியாக உள்ள அரசு கட்டடங்களை வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன், இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வித்துறை, உள்துறை, ஊரக வளர்ச்சி, எரிசக்தி, கால்நடை பராமரிப்பு பால்வளம், கூட்டுறவு உணவு பாதுகாப்பு, கைத்தறி, சட்டம், சமூகநலம், சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் வனம், செய்தி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி பண்பாடு, வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தொழில், வேலைவாய்ப்பு, நகராட்சி குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலை, நிர்வாக சீர்திருத்தம், பள்ளிக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலம், பொதுப்பணி, போக்குவரத்து, மக்கள் நல்வாழ்வு, காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, பத்திரப்பதிவு, வருவாய், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை, சிறை, தீயணைப்பு, மருந்து கட்டுப்பாட்டு என முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளது.
சென்னையில் மாநில அளவில் உள்ளது போல் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய அரசுத்துறைகள் உள்ளது, இதில் பெரும்பாலான அரசு துறைகளுக்கு சொந்த கட்டடங்கள் உள்ள நிலையில், ஒரு சில அரசுத்துறைகள் பல ஆண்டுகளாக இன்னும் வாடகை கட்டடங்களில் தான் இயங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட காலம் கடந்து கட்டடங்கள் இடமாற்றம் செய்யும்போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதே நேரம் பல்வேறு அரசுத் துறைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், பழைய கட்டடங்களை சிறிதளவு பராமரிப்பு பணி செய்தாலே பல ஆண்டுகள் செயல்பட முடியும் என்ற நிலையில் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கின்றது. இத்தகைய அலுவலகங்களை சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் குடிநீர் வடிகால் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இ.எஸ். ஐ. மருந்தகம், நூலகம், தொழிலாளர் ஆய்வாளர் போன்ற துறைகள் இன்னும் சொந்த கட்டடங்கள் இல்லாமல் வாடகை கட்டடங்களிலேயே பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
அதே நேரம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா ஆபிஸ்
கட்டடங்கள் பயன்படுத்தாமல் இன்னும் காலியாகவே உள்ளது.
ஆண்டாள் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் இருந்த போதிலும் செயல் அலுவலர் அலுவலகங்கள் இன்னும் கோயில் வளாகத்தில் தான் செயல்படுகிறது. தனியாக சொந்த கட்டடம் இல்லை.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இ.எஸ்.ஐ. மருந்தகம் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். அதிலும் ஆட்டோக்களில் தான் மருந்துகத்திற்கு செல்ல முடியும் என்பதால் ஏழை மக்கள், இ.எஸ்.ஐ.மருந்தகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை நிர்வாகத்திற்கு ஏராளமான புத்தகங்கள், நாற்காலிகள் வந்துள்ள நிலையில் அவற்றை பயன்படுத்த கூட இடமில்லாத அளவில்தான் தற்போதைய வாடகை கட்டடம் உள்ளது.
எனவே, ஒவ்வொரு தாலுகாவிலும் இதே போல் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை, காலியாக உள்ள அரசு துறை கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.