மாவலி பதில்கள்

லாட்டரியை கள்ளத் தொழில் போன்று பேசுவதா என லீமாரோஸ் ஆவேசப்பட்டிருக் கிறாரே?
சட்டமன்றத்தில் பேசியவர், லாட்டரி விற்பனை மறுக்கப்பட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் லாட்டரியைப் பற்றி பேசியிருப்பார். லீமா பேச்சை மடைமாற்றியிருப்பார். 2009- 2010 காலகட்டத்தில் கேரளாவில் சிக்கிம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. பரிசுத் தொகைகளை போலியாக உயர்த்திக்காட்டி சிக்கிம் அரசுக்கு ரூ.910.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் யார் குடும்பம்மீது வழக்கு நடக்கிறதாம்? தவிரவும், லாட்டரித் தொழில் ஒன்றும் புனிதமானதெல்லாம் இல்லை.
கே.வல்லவன், பேரணாம்பட்டு.
தமிழகத்தில் காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளதே?
இத்தனையும் நடந்துகொண்டிருக்கும் போதுதான் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 7.8% என அடித்துவிடுகிறார் மோடி. கடந்த ஏப்ரல்-ஜூனில் இந்தியாவின் ஜி.டி.பி. 86.05 லட்சம் கோடி. எனில் இன்று அதிலிருந்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று பார்த்துத்தானே ஜி.டி.பி. வளர்ச்சிவிகிதம் கணக்கிடவேண்டும். மாறாக, 6.05 கோடியைத் தள்ளிவிட்டு 80 லட்சம் கோடியிலிருந்து, இந்த வருஷ ஜி.டி.பி. மதிப்பான 88.27 லட்சம் கோடிக்கு மதிப்பிட்டு நம் காதில் பூச்சுற்றுகிறார் பிரதமர்.
வருங்கால மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கியுள்ளாரே ஒருவர்?
ராசிபுரம் அருகே வசிக்கும் அசோக் சரவணன், 32 வயது கட்டடப் பொறியாளர். அவருக்கு ராதிகா வர்ஷினி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசை கொடுக்க வேண்டுமென நினைத்து, ஒரு வலைத்தளத்தில் பார்த்து, நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாகக் கூறுகிறார். இன்றுவரை நிலவு எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லை. பிறகெப்படி தனிநபர்கள் நிலம் வாங்கமுடியும்! ஏதோ சதுரங்க வேட்டைக் கும்பலிடம் பணத்தை விட்டுள்ளார்.
வைரமுத்துவை விலக்கி வைத்தபிறகு ரகுமானின் வீழ்ச்சி துவங்கிவிட்டதா?
தனி ஒரு கவிஞரை விலக்கிவைப்பதால் இசையமைப்பாளர் வீழ்ந்துவிடமாட்டார். 1986-ல் இளையராஜா- வைரமுத்து ஜோடி பிரிந்தது. பிறகும் இருவரும் தனித்தே சாதித்தார்கள்தானே. சினிமா வில் மார்க்கெட் ஏறுவதுபோலவே சரியவும் செய்யும்.
பத்திரிகைகள் மீது எம்.எல்.ஏ.க்களுக்கு மிகுந்த மரியாதையிருக்கிறது என்று சபாநாயகர் சட்டசபையில் தெரிவித்துள்ளாரே?
சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின், த.வெ.க. ஈர்த்த முதலீடுகள், தி.மு.க. கொண்டுவந்த முதலீட்டு ஈர்ப்பின் விரிவாக்கங்கள்தானே என்று வைத்த குற்றச்சாட்டையடுத்து, த.வெ.க. தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, ஒரு பத்திரிகையைக் குறிப்பிட்டு காசுக்குச் செய்தி வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த போது, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க சபாநாயகர் தெரிவித்த கருத்துதான் அது.
ஓணம் பண்டிகையின்போது கேரளத்தில் ரூ.771 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதே?
தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியிலோ, சட்டம்- ஒழுங்கிலோ மாநிலங்கள் போட்டியிடுகிறதோ இல்லையோ,… பண்டிகைக்குப் பண்டிகை ஒரு மாநிலத்தை மற்ற மாநிலங்கள் முந்துவதும், அதை பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தியாக்குவதும் தொடர்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது எந்த பாட்டு மிகவும் பொருத்தமாக இருக்கும்?
அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சி மாறும்போது, "போனால் போகட்டும் போடா', எதிர் முகாமுக்குத் தாவ இருப்பவர்கள், செயற்குழுவைக் கூட்ட வேண்டும் எனும்போது, “"என்னதான் நடக்கும் நடக் கட்டுமே', அனைத்தையும் சமாளித்து தைரியமாக கட்சி நடத்தவேண்டும் என்ற மூடில் இருக்கும்போது, "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா', எதிர்க்கட்சியினர் ஏளனமாகப் பார்க்கும்போது, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு...'’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)