Politics
மிஸ்டர் கழுகு: “எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது!” - கறார் காட்டும் முத்துநகர் மாண்புமிகு!

தேனி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும், போதைப்பொருள் கடத்தலும் தங்கு தடையின்றி நடைபெறுவதாக உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறதாம்.
முத்துநகர் மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய பொறுப்பிலுள்ள சூரியக் கட்சிப் புள்ளி, வசூலில் கரைகண்டவர் என்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தாலும், இதுவரை அவர் அடித்த ஸ்வீட் பாக்ஸுகள் எக்கச்சக்கமாம். இந்த விவகாரங்களைத் தோண்டியெடுத்து, ‘மாநகராட்சியில் என்ன நடக்கிறது?’ என்று விசாரித்திருக்கிறார் மாவட்ட மாண்புமிகு. மாநகராட்சியின் உச்ச அதிகாரியைத் தொடர்புகொண்டு சமீபத்தில் பேசவும் செய்திருக்கிறார். ‘டெண்டர் விவகாரங்களை என்னிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்’ என்று கறாராகச் சொன்னாராம். விஷயமறிந்த வணக்கத்துக்குரியவர், மாநகராட்சி விவகாரங்களில் மாண்புமிகு ஏன் தலையிடுகிறார் என்று ஆதரவு அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்தினாராம். இது ஒருபுறமிருக்க... ‘மாவட்டத்தில் எந்தப் பணி நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடக்கக் கூடாது’ என்று தன் நெருங்கிய ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருக் கிறாராம் மாண்புமிகு. ஸ்வீட் பாக்ஸுகளை அள்ளும் நோக்கத்தில்தான் மாண்புமிகுவும் காய்நகர்த்துகிறார் என்று ஆளும் தரப்பினரே கிசுகிசுக்கிறார்கள்.
“தப்பா எழுதிக்குடுத்துட்டாங்க...” - முதலீட்டு நிறுவனத்தை வம்பிழுத்த எம்.எல்.ஏ தாஹிரா!
`ராணிப்பேட்டை தொகுதியில் இயங்கும் ஜே.கே.டயர்ஸ் ஆலை இரவில் டயர்களை எரிப்பதால் கடும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. மக்கள் நலன் கருதி அதை உடனடியாக மூட வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, அதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜீவ், `உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன். அதிகாரிகளைவைத்து ஆய்வுசெய்யச் சொல்கிறேன்’ என்று பதிலளித்தார். ஆனால், ராணிப்பேட்டையில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்தின் ஆலையே இல்லையென்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதை அமைச்சர் கீர்த்தனாவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உறுதிசெய்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில்’, தமிழ்நாடு வழிகாட்டி அமைப்புடன் ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் ரூ.5,143 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தச் சூழலில், `ஜே.கே.டயர்ஸ் பெயரைக் குறிப்பிட்டுத் தவறான தகவல்களை தாஹிரா பரப்பியது ஏன்?’ என விசாரணை சூடு பிடித்திருக்கிறது. ‘எழுதிக்கொடுத்தவர்கள் தவறான தகவலைக் கொடுத்துவிட்டார்கள்’ என விளக்கமளித்து செம டோஸ் வாங்கினாராம் தாஹிரா.
தேனியில் போதை, லாட்டரி... கண்டுகொள்ளாத காவல்துறை!
தேனி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும், போதைப்பொருள் கடத்தலும் தங்கு தடையின்றி நடைபெறுவதாக உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறதாம். “மாவட்ட அதிகாரிகள் என்னதான் செய்கிறார்கள்?” என்று ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டதில், கடத்தல் கும்பலிடமிருந்து மாதம்தோறும் காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரி களுக்கு மாமூல் சென்று கொண்டிருப்பதால், அவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
மாவட்டத்திலுள்ள அந்த ‘புத்த’ அதிகாரியோ, தனக்குக்கீழ் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் தனது அலுவலக அறையில் அமைதியாக இருக்கிறாராம். உளவுத்துறையின் உச்சப் பொறுப்பில் இருப்பவருக்கு அவர் வேண்டப்பட்டவர் என்பதால், லாட்டரி விற்பனை, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய அந்த ‘புத்த’ அதிகாரிமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். “வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்த்துக் கொண்டிருந்தால், துறை எப்படி உருப்படும்?” என்று புலம்புகிறார்கள் மூத்த காக்கிகள்!
“எங்க கட்சியிலயும் மறுசீரமைப்பு...” - தயார் நிலையில் அ.தி.மு.க!
சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீள, கட்சியை மறுசீரமைப்பு செய்துவருகிறது தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது, ஜூனியர்களுக்கு வாய்ப்பு வழங்குவது, அதற்கென உட்கட்சித் தேர்தலை நடத்துவது என பிஸியாகிவிட்டது தி.மு.க. இதைப் பார்த்த அ.தி.மு.க முக்கியப்புள்ளிகள். ‘நாமும் கட்சிக்குள் பல மாற்றங்கள் நடத்தி கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்கள். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘செப்டம்பர் 6-ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நடத்திவிட்டு, பிறகு செயற்குழுக் கூட்டத்தை நடத்துவோம். மேலும், மாவட்ட வாரியாக கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுப்போம்’ என்று சொன்னாராம். தி.மு.க-வைப்போல அ.தி.மு.க-வும் இளைஞர்களை வரவேற்கத் தயாராகிறது. அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், ‘துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இளைஞர்களுக்குப் பெருமளவில் முக்கியத்துவம் தரப்படும்’ என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள், இதற்கிடையில், த.வெ.க-வில் ஐக்கியமான சிங்கை ராமச்சந்திரன், `அ.தி.மு.க மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு அழைத்துவருகிறேன்’ என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம்.
ஊழல் செய்தவர்களுக்கு சிபாரிசு... சர்ச்சையில் மில்க் மாண்புமிகு!
‘ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்துவோம்’ என்கிறது த.வெ.க அரசு. ஆனால், பால் வளத்துறையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட சுமார் 19 அதிகாரிகளை, அவர்கள் விரும்புகிற இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான சிபாரிசுக் கடிதங்கள் துறை மாண்புமிகு அலுவலகத்திலிருந்தே கொடுக்கப்பட்டனவாம். ஆனால், ‘தகுதியற்ற நபர்களைப் பணி நியமனம் செய்ய மாட்டேன்’ என உறுதியாக இருந்து விட்டாராம் ஆவினின் உச்ச அதிகாரி. இதையடுத்து கோட்டையின் உச்ச அதிகாரி வரை அழுத்தம் கொடுத்து, 19 பேர் லிஸ்ட்டில் 4 பேரை மட்டும் அவர்கள் விரும்பிய இடங்களுக்கே பணியிட மாற்றம் செய்ய வைத்து கெத்து காட்டியிருக்கிறாராம் மாண்புமிகு. இதன் பின்னணியில் பல லட்டுகள் கைமாறியிருக்கின்றன என்கிறார்கள். `இது போன்ற தகுதியற்ற நபர்கள், ஆவினில் வேலை பார்த்துக் கொண்டே தனியார் பால் நிறுவனங்களுடன் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுவதால், 2,000 கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது ஆவின் நிர்வாகம்' என்று `நறநற’க்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
