Politics
ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுடுகாடு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், புல்லரம்பாக்கம் அடுத்த பூதூர் கிராமத்தில், 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
இதனால், அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களில் யாராவது உயிரிழந்தால், அவர்களை அடக்கம் செய்ய இடமின்றி, குறுகிய இடத்தில் ஒருவரின் உடல் மீது, இன்னொரு உடலை அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை நிலவியது.
தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பூதுார் பொதுமக்கள், பூந்தமல்லி த.வெ.க., – எம்.எல்.ஏ., பிரகாசத்திடம், தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடை மீட்டு தரக்கோரி மனு அளித்தனர். அவர், திருவள்ளூர் வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, வருவாய் துறையினர், சில நாட்களுக்கு முன், பூதுார் கிராம சுடுகாடு பகுதியில் அளவீடு செய்து, தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மீட்டு, ‘அரசுக்கு சொந்தமான இடம்’ என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.