மணிப்பூரில் 19 லட்சம் வாக்காளர்கள் வெளியானது இறுதி பட்டியல்
இம்பால், செப். 8– மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கான புகைப்படங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்
மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கான புகைப்படங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 19.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9.53 லட்சம் ஆண்கள், 10.06 லட்சம் பெண்கள், 308 மூன்றாம் பாலினத்தினர் அடங்குவர்.
மணிப்பூரில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, மாநில தேர்தல் பதிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பின்போது, 19.34 லட்சம் பேர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கினர். படிவங்கள் சமர்ப்பிக்காத 1.58 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு சென்றவர்கள், உயிரிழந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஜூலை 5ல் 19.34 லட்சம் வாக்காளர்களுடன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு முன் மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 20.93 லட்சமாக இருந்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது, ஆவணங்கள் மற்றும் பதிவுகளில் முரண்பாடு இருந்த மொத்தம் 12.21 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீசைத் தொடர்ந்து நடந்த விசாரணை மற்றும் ஆவண சரிபார்ப்பில், திருப்திகரமான ஆவணங்கள் இல்லாதது, உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களால் 26,362 பேர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 56,871 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
இதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 19,60,620 பேர் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின் பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் நேற்று நடந்த கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.