மணலி படகு குழாமில் வாட்டர் ஸ்கூட்டர் கட்டணம் குறைப்பு
மணலி: மணலி படகு குழாமில் 'வாட்டர் ஸ்கூட்டருக்கான' கட்டணம், 800 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக குறைக்கப்பட்டது, மீண்டும், 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் மணலி ஏரியில், 10.41 கோடி ரூபாய் செலவில் படகு குழாமை அமைத்தது. இதற்காக, 29 ஏக்கர் பரப்பளவும், 1,787 மீட்டர் சுற்றளவும் கொண்ட ஏரியை, 4 மீட்டர் ஆழப்படுத்தி, 1.2 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாக சீரமைத்தது.
கடந்த ஜனவரி 14-ம் தேதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, படகு குழாம் திறந்து வைக்கப்பட்டது.
எட்டு பேர் பயணிக்கும் படகுக்கு, 800 ரூபாய், நான்கு பேர் படகுக்கு, 400 ரூபாய், இரண்டு பேர் படகுக்கு, 300 ரூபாய் மற்றும் வாட்டர் ஸ்கூட்டருக்கு ஒரு சுற்றுக்கு, 800 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், படகுகளுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
அதன்படி, சில நாள்களிலேயே எட்டு பேர் படகின் கட்டணம், 500 ரூபாயாகவும், நான்கு பேர் படகின் கட்டணம், 300 ரூபாயாகவும், இரண்டு பேர் படகின் கட்டணம், 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டது.
வாட்டர் ஸ்கூட்டருக்கான கட்டணம், 500 ரூபாயாக குறைக்கப் பட்டது.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வாட்டர் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கட்டணம் அதிகமாக இருப்பதால் மேலும் கட்டணத்தை குறைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, வாட்டர் ஸ்கூட்டரின் ஒரு சுற்றுக்கான கட்டணம், 300 ரூபாயாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாதவரம் படகு குழாமிலும் வாட்டர் ஸ்கூட்டருக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.