Environment
ஒடிஷா காட்டில் ஒராங்குட்டான் குட்டிகள் சட்டவிரோத கடத்தலா என விசாரணை
பாலசோர்: ஒடிஷா வனப்பகுதியில் வெளிநாட்டில் காணப்படும் ஐந்து அரியவகை ஒராங்குட்டான் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என விசாரணை நடத்தப்படுகிறது.
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பிச்சித்ராபூர் காட்டில், அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் சுற்றி திரிவதை அப்பகுதி மக்கள் கண்டனர். மரத்திற்கு மரம் நகர்வதை கண்ட மக்கள், அவற்றை புகைப்படம் எடுத்தனர். இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறை அதிகாரிகள், பிறந்து சில மாதங்களே ஆன 1 முதல் 1.5 அடி உயரமுள்ள ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அவற்றை பரிசோதித்ததில், நான்கு குட்டிகள் நலமுடன் இருந்ததும், ஒரு குட்டி நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மூன்று ஆண், இரண்டு பெண் என ஐந்து குட்டிகளும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பாலசோர் கோட்ட வன அதிகாரி கூறுகையில், ‘ஒராங்குட்டான் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேஷியாவில் அடர்ந்த காடுகளில் காணப்படும் அரியவகை விலங்கு. அங்கேயே அழிந்து வரும் இனமாக உள்ள ஒராங்குட்டானின் குட்டிகள் ஒடிஷா காடுகளுக்கு வந்தது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ள குட்டிகள் முழுமையாக குணமடைந்த பின், புவனேஸ்வரில் உள்ள நந்தன்கணன் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்படும்’ என்றார்.
ஒராங்குட்டான் குட்டிகள் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தனவா, வேறொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு காட்டில் விடப்பட்டனவா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.