Politics
“திமுகவில் சேர்ந்துவிடுவதாக துரை வைகோ சொன்னார்” - கே.என்.நேரு சொன்ன பரபரப்பு தகவல்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “திமுக கொடுத்த பிச்சையால் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. திமுகவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தாலும், தன்னை எம்.பியாக தேர்வு செய்தது மக்கள் தான். அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும் கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே?” என காட்டமாக விமர்சனம் செய்தார்.
துரை வைகோவின் இந்த விமர்சனத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய கே.என்.நேரு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் துரை வைகோ வைத்த விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் சின்ன பிள்ளை, ரொம்ப அதிகமாக பேசிவிட்டார். அவர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியும். எங்க அப்பா கோபக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது.. நான் உங்களுடன் வந்துவிடுகிறேன் என்று சொன்னவர் தான் துரை வைகோ.
எங்களுடைய வளர்ச்சி நின்று போய்விட்டது என்கிறார். வெற்றி அடைந்த வேட்பாளர் அவர்களுடன் சென்றிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. கடுமையாகத் தான் பேசுகிறார். அப்படி பேசுவது நியாயமில்லை. நாங்கள் திருப்பி பேசினால் அவ்வளவு தான். எங்கள் தலைவரைப் பற்றி சின்ன பிள்ளையாக இருக்கும் அவர் பேசலாமா? தலைமை பற்றியெல்லாம் பேசுகிறார். அப்போது அவர் பிறந்திருக்க கூட மாட்டார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)