Lifestyle and human interest
பீஹார் வெள்ளத்தில் 40 லட்சம் பேர் பாதிப்பு
பாட்னா:பீஹாரில் பெய்த தொடர் கனமழையால், 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீஹாரில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையாலும், நம் அண்டை நாடான நேபாளத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பாட்னா, போஜ்பூர், சரன், வைஷாலி, பாஹல்பூர், பெகுசராய், பக்சார், சமஸ்திபூர், முங்கர், கதிகார், லக்கிசராய், ககாரியா, புர்னியா, அர்வல் ஆகிய 14 மாவட்டங்களில் 514 கிராம பஞ்சாயத்துக்களில் வசித்து வரும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 7.96 செ.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் அளவை விட 31 சதவீதம் அதிகம். பாஹல்பூர் மாவட்டத்தின் சுல்தான்கஞ்ஜ் பகுதியில் கங்கை ஆற்றில் நேற்று அதிகபட்ச வெள்ளம் பதிவாகியுள்ளது.
வெள்ளம் பாதித்த பல்வேறு மாவட்டங்களில் 723 சமுதாய சமையலறை கூடங்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. இது தவிர 15 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13,446 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவுடன், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.