தொடர் விபத்து; சென்னையை நோக்கிய பயணத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

வார இறுதி விடுமுறை முடிந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து கார்கள் மற்றும் பேருந்துகள் மூலமாகச் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், நள்ளிரவைத் தாண்டிய அதிகாலையில் நிகழ்ந்த தொடர் சங்கிலி விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னால் சென்ற காரின் திடீர் பிரேக் காரணமாக, பின்னால் அசுர வேகத்தில் வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய இந்தக் கோர விபத்தின் பயங்கர சத்தம், நெடுஞ்சாலையில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளை உறைய வைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றின் ஓட்டுநர், சாலையில் நிலவிய திடீர் போக்குவரத்து நெரிசல் காரணமாகத் தனது காரை சற்றும் எதிர்பாராத விதமாகத் திடுமென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். அந்தச் சமயத்தில், அதே தடத்தில் பின்னால் மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்த மற்றொரு சொகுசு காரின் ஓட்டுநரால் அதிவேகத்தின் காரணமாகத் தனது வாகனத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் காதைக் கிழிக்கும் பயங்கர சத்தத்துடன் முன்னால் நின்ற காரின் பின்புறத்தில் அந்த கார் பலமாக மோதி நொறுங்கியது. அதற்குப் பின்னால் அடுத்தடுத்து அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த மேலும் நான்கு கார்களும் தங்களின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து, ஒன்றன்பின் ஒன்றாக மோதிச் சிதறின.
இந்தத் தொடர் மோதலின் கோரத் தாண்டவத்தால் அனைத்துக் கார்களின் முன்பகுதியும், பின்பகுதியும் ஒட்டுமொத்தமாக நசுங்கி உருக்குலைந்து போயின.விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, சென்னை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பேருந்துகளும், கார்களும் அணிவகுக்க, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
