சிறுமுகையில் பத்து இடங்களில் போர்வெல்
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சியில், ஒரு கோடி ரூபாயில், 10 இடங்களில் போர்வெல் அமைத்து, மேல்நிலைப் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப, பூமி பூஜை நடந்தது.
சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. வச்சினம்பாளையம் அருகே பவானி ஆற்றில் தண்ணீர் எடுத்து, அதை சுத்தம் செய்து, அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, பேரூராட்சி பகுதிகளில் மாநில பேரிடர் நிவாரண நிதி திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், 10 இடங்களில் போர்வெல்கள் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் போர்வெல்கள் அமைத்து, மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி, குடிநீர் வழங்குவதற்கான விஸ்தரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் துவக்க நிகழ்ச்சியாக, சிறுமுகை பேரூராட்சி வாரச் சந்தை வளாகத்தில், இதற்கான பூமி பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் பூஜையில் பங்கேற்று, போர்வெல் இயந்திரத்தை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, பணி மேற்பார்வையாளர் பிரவீன் குமார், சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.