சில்லரை விற்பனையை தவிர்க்கும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் :தனியாரிடம் கூடுதல் விலை வாங்கும் அவலம்
தேனி:மாவட்டத்தில் பல பால் கூட்டுறவு சங்கங்கள் சில்லரை விற்பனையை தவிர்ப்பதால் தனியாரிடம் கூடுதல் விலைக்கு பால் வாங்கி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
மாவட்டத்தில் 550க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 300 சங்கங்கள் பதிவு செய்து செயல்பாடு இன்றி உள்ளது. செயல்படும் பல சங்கங்கள் பால் உற்பத்தி செய்தாலும் முழுமையாக ஆவினுக்கு வழங்காமல் தனியாருக்கு வழங்குகின்றனர். மேலும் சில பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சில்லரையில் பால் விற்பனை செய்து உள்ளூர் மக்களின் தேவையை நிறைவேற்ற விரும்புவதில்லை.
சில்லரை விற்பனையை கைவிட்ட சங்கம் உதாரணத்திற்கு பெரியகுளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த ஆண்டுகளில் தினமும் ஆயிரம் லிட்டர் உள்ளூர் சில்லரை விற்பனை செய்தது. கூட்டுறவு சங்க பால் என்றால் தரம், உரிய நேரத்திற்கு வினியோகம் என்ற நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவார்கள். இவர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான பாலிற்கு முன் கூட்டியே பணம் செலுத்தி டோக்கன் பெற்று பால் பெற்றனர். தற்போது பெரியகுளம் பால் கூட்டுறவு சங்கம் சில்லரை விற்பனையை ஓராண்டுக்கு முன்பே முடக்கி டோக்கன் நடைமுறையை கைவிட்டனர். சில்லரை விற்பனை கைவிட்டது ஏன் என கேட்டால் 'ஆவினுக்கு பால் அனுப்ப வேண்டிய நெருக்கடி, ஆட்கள் பற்றாக்குறை, குறைந்த சம்பளம் என,' காரணத்தை அடுக்குகிறார் சங்க செயலாளர்.
அரசு பால் கொள்முதல் விலை செப்டம்பர் முதல் லிட்டர் ரூ.44 ஆக உயர்த்தியது. இதனால் தனியார் பால் நிறுவனங்கள் சில்லரை விலையில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ரூ.60 க்கு விற்கின்றனர். பொதுமக்கள் கூட்டுறவு பால் வாங்க விரும்பினாலும் சங்கங்கள் பால் இல்லை என கைவிரிக்கின்றனர். இதனால் தனியார் சில்லரை பால் விற்பனைக்கு பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளின் பின்புலமாக உள்ளனர் என வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர்.