Crime, law and justice
பெண் ‘பைக் ரைடர்’ மீது காரை ஏற்றி தப்பியவர் கைது
குருகிராம்: ஹரியானாவில், பெண் ‘பைக் ரைடர்’ மீது காரை ஏற்றி விட்டு தப்பியோடிய நபரை, மாநில தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் நேற்று கைது செய்தனர்.
ஹரியானாவின் கோல்ப் கோர்ஸ் சாலையில், ‘அப்ரிலியா ஆர் எஸ் 457’ என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கில், ஷியா என்கிற ஷிவானி சவுகான் தன் நண்பர்கள் குழுவுடன் விடுமுறை தினமான நேற்று முன்தினம் சென்றார். அப்போது டில்லியில் இருந்து அவ்வழியாக அதிவேகமாக சென்ற, ‘மாருதி சுசூகி சியாஸ்’ கார் மோதி, சாலையில் இழுத்து செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால், லேசான காயங்களுடன் ஷியா உயிர் தப்பினார். ஆனால், அவரது பைக் முற்றிலும் சேதமானது.
இந்த விபத்து காட்சிகளை ஷியா தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதில், ‘என் பைக் மீது மோதிய நபர், உண்மையில் வருந்தி இருந்தால், ஏன் சம்பவ இடத்தில் நிற்கவில்லை. நான், ஒரு பெண் பைக் ரைடர் என்பதால் குறிவைக்கப்பட்டேன். என்னை தடுப்பதற்கான திட்டமிட்ட முயற்சி இது. விபத்துக்குப்பின் என் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில் கூட நான் பாதுகாப்பாக இருக்கிறேனா? என்பதை கூட அந்த கார் டிரைவர் பார்க்க முயற்சிக்கவில்லை’ என, குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, குருகிராம் போலீசார் தானாக முன்வந்து இச்சம்பவத்தை விபத்து வழக்காக முதலில் பதிவு செய்தனர். அக்காட்சிகளை முழுதும் ஆய்வு செய்த பின், கொலை முயற்சி வழக்காக மாற்றினர். தலைமறைவான டிரைவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விபத்து ஏற்படுத்திய காரின் உரிமையாளர், ராணுவ வீரர் மனிஷ் என்பது தெரியவந்தது. ஆனால், சம்பவம் நிகழ்ந்தபோது அவர் காரை ஓட்டவில்லை என்பது தெரிந்தது. அவரது நண்பரான, குருகிராமைச் சேர்ந்த கல்யாண் பைன்ஸ்லா என்பவர் காரை ஓட்டியது தெரியவந்தது.
அவர் குருகிராமில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். தலைமறைவான அவர், ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் பகுதியில் பதுங்கி இருந்ததை கண்டறிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
