லாரி மீது ஆம்னி பஸ் மோதல் டிரைவர் உட்பட 15 பேர் காயம்
சங்ககிரி: சென்னையில் இருந்து, 'பாக்யலட்சுமி டிராவல்ஸ்' ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கோவைக்கு புறப்பட்டது.
நேற்று காலை, 6:45 மணிக்கு, சேலம் மாவட்டம், சங்ககிரி டி.வி.எஸ்., மேம்பாலத்தில் வந்தது. அப்போது, முன்புறம் வேலுாரில் இருந்து ஈரோடுக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற டாரஸ் லாரியில் டீசல் இல்லாததால், அதன் டிரைவர் சீனிவாசன், 54, ஓரமாக நிறுத்தினார்.
அப்போது, ஆம்னி பஸ், லாரி பின்புறம் மோதியது. இதில், பஸ்சின் முன்புறம் சேதமானது. ஆம்னி பஸ் டிரைவர் வினோத்ராஜ், 31, பஸ் பயணியரான, கோபியை சேர்ந்த ஜனனி, 23, சென்னை ஜான்சன் வில்லியம்ஸ், 52, மூர்த்தி, 52, ஞானசுந்தரம், 37, சத்தியமங்கலம் அருணேஷ், 25, உட்பட, 15 பேர் காயம் அடைந்தனர்.
சிலர், சங்ககிரி அரசு மருத்துவமனையிலும், சிலர், அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.