Arts, culture, entertainment and media
இன்பாக்ஸ்: சாய் அபயங்கர் கதாநாயகனா?!

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சிப் போட்டி, ஒரு நாள் தொடரில் களம் காண இந்திய ‘ஏ’ அணி தயாராகிவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் புதுச்சேரியில் போட்டிகள் ஆரம்பம்
கல்யாணி பிரியதர்ஷன், ‘லோகா’வில் ரத்தம் குடிக்கும் நீலியாக மிரட்டியது, பாலிவுட் வரை வைரலாகிவிட்டதுபோல. அங்கே ரன்வீர்சிங்குடன் ‘பிரலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படம் ‘ஸோம்பி’ ஜானர் என்பதால் ‘லோகா’வைவிடப் பல மடங்கு இதிலும் மிரட்டக் காத்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் புரொடக்ஷன் டிசைனர் சாபு சிரிலின் உதவியாளராகத் தன் கரியரைத் தொடங்கியவர் கல்யாணி. அப்போது சாபு சிரில் பணிபுரிந்த ‘கிரிஷ் 3’ படத்தில் உதவி கலை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். இப்போது பாலிவுட்டிலேயே ஹீரோயினாக புரொமோஷன் ஆகியிருப்பதால் மகிழ்கிறார். ஹாலிவுட்டுக்கும் போங்க கல்யாணி!
அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவின் கல்யாணம் விரைவில் நடக்கவிருக்கிறது. குஷ்பு மகளுக்கு கோவாவில் நடந்ததுபோல அர்ஜுன் மகளுக்கு லண்டனில் திருமணம் செய்யத் திட்டமிட்டுவருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் அங்கேயே செட்டிலாக முடிவெடுத்திருக்கிறார்கள். வழக்கமாக சினிமா நட்சத்திரங்கள் மகளுக்கு, கிலோக்கணக்கில் தங்கம் போடுவார்கள். பல லட்சங்களில் கார் வாங்கி கொடுப்பார்கள். ஆனால் அர்ஜுன் தன் மகளுக்கு லண்டனில் 50 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட பங்களா வாங்கி திருமணப் பரிசாகக் கொடுக்கப்போகிறாராம். அப்பான்னா சும்மா இல்லைடா!
நீண்ட நாள்களாக இயக்குநர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால், இந்திப் படங்கள் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான தனுஷ் அழைத்து, ‘மாரி 3’ திரைப்படத்துக்கான கதையை எழுதச் சொல்லியிருக்கிறார். தனுஷின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்திய வகையில் ‘மாரி’க்கு முக்கிய இடம் உண்டு. விரைவில் ‘மாரி 3’-ன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தனுஷின் புது கெட்டப்புக்கான ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. கொஞ்சம் வேற மாரி!
இதுவரை சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருந்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ், முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வக் கணக்கைத் தொடங்கி தனது முதல் வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு வேடிக்கையான ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார். ``நான் இதை முயன்று பார்க்கிறேன்; யாராவது எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்தால், எவ்விதக் கேள்வியும் இன்றி உடனடியாக இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறிவிடுவேன்’’ என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார். மேலும் தன் ஸ்டோரியில்,``கடுமையான அல்லது கோபமான கருத்துகள் குழந்தையை பாதிக்கக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, நான்தான்’’ என்று கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார். பாசிட்டிவிட்டியைப் பரப்புங்கப்பா..!
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சிப் போட்டி, ஒரு நாள் தொடரில் களம் காண இந்திய ‘ஏ’ அணி தயாராகிவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் புதுச்சேரியில் போட்டிகள் ஆரம்பம். இதில் ஹைலைட்டே, காயத்திலிருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டதுதான். 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், பாண்டியாவின் ஃபிட்னெஸ், ஃபார்மை நிரூபிக்க இந்தத் தொடர் ஒரு முக்கியச் சோதனையாக இருக்கும். மீண்டு வா பாண்டியா!
கிட்டத்தட்ட 12 முக்கியமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ஆனால், அவரை எப்படியாவது தங்களின் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் பல முக்கியமான தயாரிப்பாளர்கள் விடாப்படியாக நிற்கிறார்கள். தொடர்ந்தாற்போல் இல்லாமல் நாள்களைப் பிரித்து, 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்ற கோரிக்கையோடு அவரிடம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில், டைரக்டர் அட்லி தயாரிப்பு நிறுவனமும், கௌதம் மேனனும் முன்னணியில் இருக்கிறார்கள். ஒரு ரொமான்ஸ் படத்துக்கான கதையில் சாய் அபயங்கரை விரைவில் எதிர்பார்க்கலாம். டிரெண்டிங்ல இவருக்கு டிமாண்ட்!
இப்போது இலங்கையில் வசித்துவரும் பாடகி தீ, அங்கிருந்தபடியே இன்டிபெண்டன்ட் ஆல்பங்களை வெளியிட்டுவருகிறார். அவரது ‘வாரி வாரி’ பாடல் ஹிட் அடித்ததில் அடுத்தடுத்து ஆல்பங்களுக்குத் தயாராகிவிட்டார். சமீபத்தில்கூட அமெரிக்க பாப்பிசைக் கலைஞரான லாரா ராஜ் ஆஃப் கேட்சேயேவுடன் ‘வாரி வாரி’யின் ரீமிக்ஸையும் வெளியிட்டிருந்தார். அதுவும் கவனம் ஈர்த்துவிட்டதில் லாராவுடன் அடுத்தடுத்து கைகோக்கவிருக்கிறார். லாராவின் பூர்வீகம் தமிழ் வம்சாவளி என்பதால், தீயுடன் சேர்ந்து தொடர்ந்து பணிபுரியும் திட்டத்தில் இருக்கிறார். இதைப்போல படங்களுக்குப் பாடுவதற்கு இசையமைப்பாளர்கள் கூப்பிட்டால், சென்னைக்குப் பறந்தோடி வந்து பாடிவிட்டுத் திரும்பிவிடுகிறார் தீ. பாட்டுக் குருவி!
