Politics
ரேஷன் பொருட்களை விற்று முறைகேடு; 4 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் 15 ரேஷன் கடைகளில் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய பறக்கும் படை குழுவினர் ஒரே நேரத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
கோவிந்தராஜ் நகர் ரேஷன் கடையில் விற்பனையாளர் பாய்ன்ட் ஆப் சேல் மெஷினில் உள்ள கையிருப்பு விபரங்களை விட கடையில் கையிருப்பு பொருட்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி 59, ரேஷன் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
பாலகிருஷ்ணாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் சரண்யா 37, நாயக்கர் புதுத்தெரு ரேஷன் கடை விற்பனையாளர் டிவைன் ஆரோமெர்சிலின் 43, கருணாநிதி நகர் ரேஷன் கடை விற்பனையாளர் மெகராஜ் 50, ஆகியோரும் ரேஷன் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கூட்டுறவு சார்பதிவாளர்கள் அறிக்கையின் படி விற்பனையாளர்கள் நால்வருக்கும் ரூ.49 ஆயிரத்து 575 அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு ரேஷன் கடைகளிலும் ரூ.36 ஆயிரத்து 400 கையிருப்பு குறைந்ததால் நால்வரையும் 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீராகவ்பாலாஜி உத்தரவிட்டார். விற்பனையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மெகராஜ் ஆகியோரிடம் 'புட்ெஷல்' குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.