வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தவரை வாளால் வெட்டிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் நாகேஸ்வரன் 23. கோவையில் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவருக்கும் வசந்தநகர் பிரவின் 26, மாரியம்மன் கோவில் தெரு ராஜா 26, மற்றும் தையல்கார தெரு ஆனந்த பாலாஜி 25, ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார்.
நண்பர்களுடன் ராமநாதபுரம் கள்ளர் தெருவில் உள்ள விநாயகர் சிலையை வழிபட சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பிரவினுக்கும் நாகேஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரவின் அருகே இருந்த இரும்பு கம்பியால் நாகேஸ்வரனை தாக்கினார். மேலும் நண்பர்களான ராஜா, ஆனந்த பாலாஜி ஆகியோரை அழைத்துள்ளார். பெரிய வாளுடன் வந்த இருவரும் நாகேஸ்வரனை வெட்டினர். தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து தப்பினர். கேணிக்கரை போலீசார் ராஜா, ஆனந்த பாலாஜியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரவினை தேடி வருகின்றனர். –––